கேரளாவில் ஒருபுறம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு புறம் கோழிக்கோடு பகுதியில் ஷிகெல்லா என்ற நோய் வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு நோய் பரவியதைத் தொடர்ந்து அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் இந்நோய் தற்போது மிக அதிகமாகப் பரவி வருகிறது.
கடந்த சில வாரங்களாகச் சராசரியாகத் தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். கேரளா முழுவதும் கொரோனா பீதி இன்னும் குறையாத நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஷிகெல்லா என்ற நோய் வேகமாகப் பரவி வருகிறது. அசுத்தமான குடிநீர் மற்றும் மோசமான உணவு மூலம் இந்த நோய் பரவுவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சுகாதாரத் துறையினர் கோழிக்கோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாவட்டத்தில் பெரும்பாலும் கிணற்று நீரைத் தான் குடிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் வீடுகளில் உள்ள கிணறுகளில் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் நோய் அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடுமையான காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி, குமட்டல் தலைவலி, ஆகியவை தான் இந்த நோயின் அறிகுறிகளாகும்.
இந்நிலையில் இன்று கோழிக்கோடு அருகே உள்ள வடகரை என்ற இடத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு இந்த நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் குழந்தையை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்த குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த நோய் பாதிக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா பீதி இன்னும் குறையாத நிலையில், ஷிகெல்லா நோய் பரவி வருவது கேரளாவில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.