பொது இடங்களில் புகைத்தால் ₹ 2,000 அபராதம்

by Nishanth, Jan 2, 2021, 20:17 PM IST

புகை பிடிப்பதற்கான வயது வரம்பை 21 ஆக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும் பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் 2,000 ஆக உயரும். விரைவில் இது தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது.நம் நாட்டில் புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் வயது வரம்பு உள்ளது. தற்போதைய சட்டத்தின்படி 18 வயது ஆனால் மட்டுமே புகை பிடிக்க முடியும். இந்த வயதுக்குக் குறைவானவர்கள் புகை பிடித்தாலும், அவர்களுக்குப் புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலும் சட்டப்படி குற்றமாகும்.

இந்நிலையில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி 21 வயது ஆனால் மட்டுமே புகை பிடிக்க முடியும். இந்த வயதுக்குக் குறைவானவர்களுக்குப் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. மேலும் பள்ளி, கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்களுக்கு 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை பொருட்களை விற்பதோ, விற்பனையை ஊக்குவிக்கவோ கூடாது. மத்திய சுகாதாரத் துறை இந்த புதிய சட்டத்திற்கான வரைவு அறிக்கையைத் தயாரித்துள்ளது.

புகையிலை தடுப்பு சட்டத்தின் 7வது பிரிவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தற்போது பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கான அபராத தொகை ₹ 200 ஆகும். இந்த புதிய சட்டத்தின்படி இதற்கான அபராத தொகை ₹ 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு இரண்டு வருடம் வரை சிறையும், அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இது தவிரக் குறிப்பிட்ட அளவை விடக் குறைந்த அளவில் புகையிலை பொருட்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விற்பதும் குற்றமாகக் கருதப்படும். இதை மீறுபவர்களுக்கு 5 வருடம் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும் அனுமதி இல்லாமல் சிகரெட்டு உள்படப் புகையிலை பொருட்கள் விற்பனைக்கும் தடை வரும். புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களில் பங்கு பெறுவதும், புகையிலை பொருட்களைப் பயன்படுத்த ஊக்குவிப்பதும் குற்றமாகக் கருதப்படும்.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்