வேளாண் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற மத்திய அரசு மறுத்ததை தொடர்ந்து இன்று விவசாயிகள் சங்கத்தினருடன் நடந்த 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து 8ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி டெல்லியில் கடந்த 5 வாரங்களுக்கு மேலாக விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை மரணமடைந்துள்ளனர். நாளுக்கு நாள் இந்த போராட்டத்தின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
இதை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி எடுத்து வருகின்ற போதிலும் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை. இதுவரை விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் புதிய சட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசும், வாபஸ் பெறாமல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று விவசாயிகள் சங்கத்தினரும் கூறியதால் போராட்டம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்று 7வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தனர். சட்டத்தை வாபஸ் பெற முடியுமா முடியாதா என்று மட்டும் கூறினால் போதும் என்று கூட்டத்தில் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் சட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை விவசாயிகள் சங்கத்தினர் ஏற்கவில்லை. புதிய சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்கள் பறிபோகாது என்று வியாபாரிகள் வாரிய தலைவர் உறுதியளித்தார். மத்திய அரசின் புதிய சட்டத்தால் விவசாயிகளின் விவசாய நிலங்கள் பறிபோகும் என்று கூறுவது உண்மையல்ல என்று பாஜக தலைவரும், உத்தரபிரதேச வியாபாரிகள் வாரிய தலைவருமான ரவிகாந்த் கார்க் கூறினார். புதிய சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்கள் பாதுகாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இறுதியில் இன்று நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.