இந்தியாவில் 2 கொரோனா தடுப்பு ஊசிகளைப் பயன்படுத்துவதற்கு இறுதி அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகளுக்குத் தான் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த பூனா சிரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் கோவாக்சின் என்ற தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்தது.
இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்சின் என்ற தடுப்பூசிக்கும் நிபந்தனைகளுடன் தற்போது மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் தயாராக உள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசியைச் சோதித்துப் பார்த்ததில் 70.42 சதவீதம் வெற்றி கிடைத்துள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அவசர கட்டத்தில் பயன்படுத்துவதற்காக நிபந்தனைகளுடன் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அவசர கதியில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. முழுமையாக சோதனை செய்யப்படாமல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு தற்போது பாரத் பயோடெக் நிறுவன எம்.டி கிருஷ்ணா ``இந்தியாவில் மட்டும் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படவில்லை. பாகிஸ்தான், இங்கிலாந்து, நேபாளம், வங்கதேசம் என 12 நாடுகளில் தடுப்பூசி பரிசோதனையை நடத்தியுள்ளோம். பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய நிறுவனம் மட்டுமல்ல, உலகளாவிய நிறுவனம். தடுப்பூசி தொடர்பாக 70 கட்டுரைகளை உலக அளவில் வெளியிட்டுள்ளோம்" என விளக்கம் கொடுத்துள்ளார்.