கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு லட்சக்கணக்கில் டாலர் கடத்தியதாக கூறப்பட்ட புகாரில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் உதவியாளர் அய்யப்பன் இன்று சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜரானார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் கேரள அரசின் சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் உயரதிகாரிகள் தொடர்பு வைத்திருந்தது தான் இதற்கு காரணமாகும். இது தொடர்பாக ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கர் கைது செய்யப்பட்டார். மேலும் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனிடம் பலமுறை சுங்க இலாகாவும், மத்திய அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் கும்பலிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் உள்ள சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்காக வெளிநாட்டுக்கு லட்சக்கணக்கில் டாலர்கள் கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனும் டாலர் கடத்தலுக்கு துணை போனது தெரியவந்தது. சட்டசபை சபாநாயகரே டாலர் கடத்தலுக்கு துணை போனதாக வெளியான தகவல் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரிடம் விரைவில் சுங்க இலாகா விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முன்னோடியாக சபாநாயகரின் கூடுதல் தனிச் செயலாளரான அய்யப்பனிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது.
இது தொடர்பாக 3 முறை நோட்டீஸ் கொடுத்தும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். தன்னுடைய உதவியாளரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த சுங்க இலாகா, கிரிமினல் வழக்கில் விசாரணை நடத்த யாருடைய முன் அனுமதியும் தேவையில்லை என்று கூறியது. எனவே கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி மீண்டும் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று ஐயப்பன் கொச்சியில் உள்ள சுங்க இலாகா தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் சபாநாயகருக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்தால் அவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.