இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இரண்டு கொரோனா தடுப்பூசிகளை அவசர தேவைக்குப் பயன்படுத்த மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை கடந்த வாரம் அனுமதி அளித்தது.
இதற்கு முன்னோடியாகக் கடந்த வாரம் நாடு முழுவதும் இரண்டு முறை சோதனை ஒத்திகை நடத்தப்பட்டது. மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார மையங்களில் இந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தடுப்பூசிகள் பூனாவில் இருந்து நாடு முழுவதும் அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காகப் பயணிகள் விமானங்களும் தயார்ப் படுத்தப்பட்டுள்ளன. சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து தென் மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் சற்று முன் நடந்தது. இந்த கூட்டத்தில் கேபினட் செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை வினியோகிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக டாக்டர்கள், நர்சுகள் உள்படச் சுகாதாரத் துறையினர், போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்படும். இதன் பின்னர் 50 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கும், 50 வயதிற்குக் கீழ் உள்ள கடுமையான நோய் பாதித்தவர்கள் உள்பட 27 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.