சிராஜ், பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி தாக்குதல் இந்திய அணி புகார்

by Nishanth, Jan 9, 2021, 17:30 PM IST

சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்களான முகம்மது சிராஜ் மற்றும் பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய அணி முறைப்படி புகார் செய்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போது இந்தியாவை விட ஆஸ்திரேலியா 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது முகம்மது சிராஜ் மற்றும் பும்ராவுக்கு எதிராக நேற்றும், இன்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசினர். இது குறித்து இருவரும் கேப்டன் ரகானேவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கேப்டன் ரகானே மைதானத்தில் இருந்த நடுவர்களிடம் இது குறித்து புகார் செய்தார். மைதானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் இது தொடர்பாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் மேட்ச் ரெப்ரி டேவிட் பூனிடமும் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது சிராஜுக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடந்ததைப் பிரபல பத்திரிகையாளர் போரியா மஜும்தாரும் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பது: சிட்னி மைதானத்தில் வைத்து முகம்மது சிராஜுக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக இந்திய அணி முறைப்படி புகார் அளித்துள்ளது. போட்டியின் போது மது அருந்தி வந்திருந்த ரசிகர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டனர். இது குறித்து மேட்ச் ரெப்ரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு ஜனவரியில் இதே சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ சைமன்ட்சை இந்தியப் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், குரங்கு என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக 2007ல் வடோதராவில் ஒருநாள் போட்டி நடந்தபோது ரசிகர்களும் சைமண்ட்சை குரங்கு என்று அழைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

You'r reading சிராஜ், பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி தாக்குதல் இந்திய அணி புகார் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை