கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி அருகே தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த எல்லை பலகைகளை வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கிய தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் வரவேற்பு பலகை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை ஆகிய இரண்டையும் இன்று மாலை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கினர்.
இந்த இரண்டு பலகைகளும் தமிழில் எழுதப்பட்டிருந்ததுதான் காரணமாம். கன்னட சலுவாலியா கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அவரது கட்சியினர் சுமார் 50 பேர் இன்று மாலை பாரதிபுரம் வந்து தமிழ்பெயர்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை கிழித்தும், பெயர்பலகையை அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தினர். பின்னர் கன்னட மொழியில் கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இரு மாநில எல்லை வழியாக செல்லும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் தமிழில் மட்டுமே வைக்கப்பட்டதை கண்டித்து வைக்கப்பட்ட பெயர் பலகைகளை வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாட்டள் நாகராஜ் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. கன்னட அமைப்பினர் நடத்திய இந்த போராட்டத்திற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.