வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக வரும் 21ம் தேதி சட்டசபையில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமார் ஆகியோருடன் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பது சுங்க இலாகாவின் விசாரணையில் தெரியவந்தது. திருவனந்தபுரத்தில் ஸ்வப்னா நடத்தி வரும் ஒரு கார் ஒர்க் ஷாப்பை சபாநாயகர் தான் திறந்து வைத்தார். ஒரு கார் ஒர்க் ஷாப் திறப்பு விழாவுக்கு உயர்ந்த பொறுப்பில் இருக்கும் சபாநாயகரே வந்தது அப்போது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஸ்வப்னா மற்றும் சரித்குமாரிடம் சுங்க இலாகா நடத்திய விசாரணையில், கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு சில முக்கியப் பிரமுகர்களுக்காக டாலர்களை கடத்தியது தெரியவந்தது. அந்த முக்கிய பிரமுகர்களின் பட்டியலில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனும் இருந்தார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது. ஆனால் உயர் பதவியான சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் விசாரணை நடத்துவதற்கு முன் சட்ட ஆலோசனை பெற சுங்க இலாகா தீர்மானித்தது. இதில், முறைப்படி நோட்டீஸ் கொடுத்து சபாநாயகரிடம் விசாரணை நடத்தலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது. ஆனால் தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக சபாநாயகரின் உதவியாளர் அய்யப்பன் என்பவரிடம் சுங்க இலாகா விசாரணை நடத்தியது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே டாலர் கடத்தல் வழக்கில் சபாநாயகருக்கு எதிராக புகார் எழுந்துள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து வரும் 21ம் தேதி இது தொடர்பாக விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள சட்டசபையில் சிபிஎம் தலைமையிலான ஆளும் கட்சிக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருப்பதால், இது தொடர்பாக விவாதம் நடந்தாலும் இந்த தீர்மானம் தோல்வியடையவே அதிக வாய்ப்புகள் உள்ளன.