கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இன்று 6,004 பேருக்கு நோய் பரவியது. சிகிச்சை பலனின்றி 26 பேர் மரணமடைந்தனர். இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா நோய் பரவல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உட்பட பெரும்பாலான மாநிலங்களில் நோய் பரவல் அதிகமாக இருந்த போது கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மிகமிக குறைவாகவே இருந்தது. மேலும் நோய் பாதித்து மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடந்த இரு மாதங்களாக தினமும் சராசரியாக 5,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. சிகிச்சை பலனின்றி சராசரியாக தினமும் 25 பேருக்கு மேல் மரணமடைந்து வருகின்றனர்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்பட மற்ற மாநிலங்களில் நோய் பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில் கேரளாவில் தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மத்திய சுகாதாரத் துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் நோய் பரவியவர்களின் எண்ணிக்கை 15,968 ஆகும். நோய் பரவியவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 17,817 பேர் குணமடைந்துள்ளனர். இதேபோல இந்தியாவில் கடந்த சில நாட்களாக மரண எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 202 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,51,629 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வரும் அதே வேளையில், கேரளாவில் இன்றும் நோய் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 6,004 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,373 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து கேரள வந்த ஒருவருக்கும் இன்று நோய் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்காக அவரது உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக பூனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.