பாலியல் வல்லுறவு குற்றஞ்சாட்டும் பெண்ணின் சகோதரிக்கும் தனக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில சமூகநீதி துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உறவு தன் மனைவி, பிள்ளைகள் மற்றும் நண்பர்களுக்கு தெரியுமாதலால் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மறைந்த பாஜ மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கோபிநாத் முண்டேயின் உறவினரான தனஞ்செய் முண்டே (வயது 45), கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா முண்டேயுடன் ஏற்பட்ட தீவிர கருத்துவேறுபாட்டால் 2013ம் ஆண்டு பாரதிய ஜனதாவிலிருந்து விலகி தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
கோபிநாத் முண்டே 2014ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். தனஞ்செய் முண்டே தற்போது மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டி வருகிறார். ஜனவரி 10ம் தேதி மும்பை காவல் ஆணையருக்கு அப்பெண் எழுதியுள்ள கடிதத்தில் அமைச்சர் முண்டே 2006ம் ஆண்டு தன்னுடன் பலமுறை பாலியல் வல்லுறவு கொண்டதாக தெரிவித்துள்ளார். அப்பெண், முன்னர் தான் காவல்துறையை அணுகியபோது புகாரை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டு அதில் தேசியவாத கட்சி தலைவர் சரத் பவாரையும் டாக் செய்துள்ளார்.
தன் மீது குற்றம் சாட்டும் பெண்ணின் சகோதரியுடன் தனக்கு 2003ம் ஆண்டிலிருந்து தொடர்பு இருப்பதாகவும், அந்த உறவின் மூலம் ஒரு மகனும், மகளும் தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ள அமைச்சர், இந்த உறவு தன் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் தெரியும் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது அப்பெண்கள் தன்னை மிரட்டுவதாகவும், இது குறித்து கடந்த நவம்பர் மாதம் தானும் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் குற்றச்சாட்டின் பேரில் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் தனஞ்செய் முண்டேவை அமைச்சரவையை விட்டு விலக்குமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் கடிதம் எழுதியுள்ளனர்.