கேரளாவில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கும், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலாவுக்கும் இடையே இப்போதே மோதல் ஏற்படத் தொடங்கி விட்டது. தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுடன் கேரளாவுக்கும் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுகவை போலத் தான் கேரளாவில் காங்கிரசும், சிபிஎம்மும். இந்த இரு கூட்டணி கட்சிகள் தான் இதுவரை மாறி மாறி கேரளாவில் ஆட்சி அமைத்து வருகின்றன. ஒருமுறை காங்கிரஸ் என்றால், அடுத்த முறை கண்டிப்பாக கம்யூனிஸ்ட் ஆட்சி அமையும். இதுவரை இதில் ஒரு கட்சி கூட தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோஷ்டிப் பூசல் இல்லாமல் காங்கிரஸ் கட்சி இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். கேரளாவிலும் காங்கிரஸ் கட்சியில் ஏராளமான கோஷ்டிகள் உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாகரன் இருந்த காலத்தில் அவரது எதிர் கோஷ்டியில் செயல்பட்டவர் ஏ.கே. அந்தோணி. தற்போது ஏ.கே. அந்தோணி டெல்லி அரசியலை கவனித்து வருகிறார். இவர்களுக்குப் பின்னர் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவும் தான் கோஷ்டி அரசியலில் முன்னணியில் உள்ளனர். மிக இளம் வயதிலேயே எம்எல்ஏ, மாநில காங்கிரஸ் தலைவர், அமைச்சர் என முக்கிய பொறுப்புகளை வகித்த ரமேஷ் சென்னித்தலா கடந்த பல வருடங்களாகவே முதல்வர் பதவிக்கு கனவு கண்டு வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது ஏ.கே. அந்தோணி முதல்வராக இருந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. 20 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இதனால் மனம் வெறுத்த அந்தோணி, தோல்விக்கு முழு பொறுப்பேற்று தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போதே முதல்வர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று ரமேஷ் சென்னித்தலா கருதினார்.
ஆனால் எதிர்பாராத வகையில் உம்மன் சாண்டி முதல்வரானார். இது ரமேஷ் சென்னித்தலாவுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது. 2004 முதல் 2006 வரை உம்மன் சாண்டி முதல்வராக இருந்தார். இதன் பிறகு அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியாவது தனக்கு கிடைக்கும் என ரமேஷ் சென்னித்தலா நினைத்தார். ஆனால் அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் உம்மன் சாண்டிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அப்போதாவது தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என ரமேஷ் சென்னித்தலா மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் அந்த முறையும் அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அப்போதும் உம்மன் சாண்டி தான் முதல்வராக நியமிக்கப்பட்டார். எவ்வளவு நாள் தான் பொறுப்பது என பொங்கி எழுந்த ரமேஷ் சென்னித்தலா, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக வெளிப்படையாகவே கருத்துக்களை தெரிவித்தார்.
இதனால் வேறு வழியில்லாமல் அந்த அரசின் கடைசி கட்டத்தில் அவருக்கு மாநில உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர் ஓரளவு திருப்தி அடைந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த முறையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி உம்மன் சாண்டிக்கே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் பதவி தனக்கு வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பது தான் அப்போது உம்மன் சாண்டியின் திட்டமாக இருந்தது. ஆனால் இந்த திட்டம் ரமேஷ் சென்னித்தலாவுக்கு தெரியாது. இது தெரியாமல் ரமேஷ் சென்னித்தலா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். தற்போது அடுத்த சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. இந்த முறை எப்படியாவது முதல்வர் பதவியை பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் ரமேஷ் சென்னித்தலா காய்களை நகர்த்தி வருகிறார். ஆனால் அவருக்கு செக் வைக்கும் பணியில் உம்மன் சாண்டியும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். இது குறித்து அறிந்த காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் கேரள காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்தது.
இதையடுத்து உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னித்தலா, மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் தலைவர்கள் டெல்லி சென்றனர். அப்போது முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால் முதல்வர் வேட்பாளரை தேர்தலுக்கு பின்னர் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும், காங்கிரஸ் தேர்தல் பணிக் குழுத் தலைவராக உம்மன் சாண்டியை நியமிக்கவும் டெல்லி மேலிடம் தீர்மானித்தது. இது ரமேஷ் சென்னித்தலாவுக்கு மீண்டும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் வேறு வழியின்றி காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் மேலிடத்தின் இந்த முடிவு தனக்கு எந்த ஏமாற்றத்தையும் தரவில்லை என்றும், தன்னை யாரும் தனிமைப்படுத்தவில்லை என்றும் சென்னித்தலா பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் உம்மன் சாண்டி தான் முதல்வராக வரவேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணியின் முக்கிய கட்சியான முஸ்லிம் லீக்கும் விரும்புகிறது. எனவே இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவிக்கு உம்மன் சாண்டி மற்றும் ரமேஷ் சென்னித்தலாவுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.