கொரோனா காலத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன் முதல் விஷால், சரத்குமார், கருணாஸ், நடிகைகள் நிக்கி கல்ராணி, ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். அதேபோல் நடிகை தமன்னாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 3 மாதங்களுக்கு முன் ஐதராபாத்துக்கு தமன்னா படப்பிடிப்புக்கு சென்றபோது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று பாசிடிவ் என தெரியவந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். 3 வாரங்கள் அவர் தனிமையிலிருந்தார். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டார்.
தனிமையிலிருந்த அவர் இதையடுத்து வீடு திரும்பினார். சில நாட்கள் ஓய்வில் இருந்தார். உடற் பயிற்சி செய்து ஷூட்டிங் செல்ல தயார்படுத்தினார். உடனடியாக ஷூட்டிங்கிலிருந்து அழைப்பு வரவே படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். அடுத்த மாதம் முழுவதும் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட தமன்னா உடனடியாக படப்பிடிப்பில் பங்கேற்றதால் அவருக்கு அடிக்கடி சோர்வு ஏற்பட்டது. படப்பிடிப்புகளை முடித்துக்கொடுத்துவிட்டு மீண்டும் உடல்நிலையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்சியாக உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இதில் அவர் உடல்நிலை பழைய நிலைக்கு திரும்பியது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டு மெசேஜ் பகிர்ந்த தமன்னா, நீங்கள் உட்சபட்சமாக பயிற்சி என்ற பெயரில் உடலை வருத்த வேண்டாம். தொடர்ச்சியாக 2 மாதங்கள் கண்காணிப்புடன் ஒர்க் அவுட் செய்தால் போதும் பழைய ஆரோக்கியத்துக்கு திரும்பலாம். நான் இப்பொது கோவிட் பாதிப்புக்கு முன் எப்படி உடல் ஆரோக்கியம், எனர்ஜியுடன் இருந்தேனோ அப்படி திரும்ப வந்துவிட்டேன். நீங்கள் கோவிட்டில் பாதிக்கப்பட்டிருந்தால் எந்த சாக்கும் சொல்லாமல் வலிமையாக இருங்கள். நீங்களும் என்னைப்போல் ஆரோக்கியத்துக்கு திரும்பலாம். தினமும் பயிற்சி செய்யுங்கள் என்றார். தமன்னா தற்போது சீட்டிமார், குருதுண்டா சீதாகாலம், அந்தாதுன் ரீமேக், உள்ளிட்ட 4 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.