மேற்கு வங்கத்தில் சுவெந்து அதிகாரியைத் தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இவரும் பாஜகவுக்கு தாவலாம் எனத் தெரிகிறது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜிப் பானர்ஜி இன்று(ஜன.22) பதவி விலகினார். அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். அதன் நகலை மம்தாவுக்கும் அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே மம்தா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த சுவெந்து அதிகாரி பதவி விலகி கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். அதே போல், ராஜிப் பானர்ஜியும் பாஜகவில் சேருவார் எனத் தெரிகிறது.மேற்கு வங்கத்தில் வரும் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சி மக்களிடம் கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமிழந்து குட்டிக் கட்சிகளாக மாறி விட்டன.
பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி மேற்கு வங்கத்திற்கு விசிட் செய்து அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதில் ஒன்றாக திரிணாமுல் கட்சிக்குள் உள்ள அதிருப்தியாளர்களை பாஜக வளைத்து வருகிறது.திரிணாமுல் கட்சியின் முக்கியப் பிரமுகரும், மம்தா பானர்ஜிக்கு தீவிர விசுவாசியாகவும் இருந்து அதிருப்தியாளராக மாறிய சுவெந்து அதிகாரி, பாஜகவில் சேர்ந்த போது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரணம், சுவெந்து போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும், திரிணாமுல் கட்சியில் பல மாவட்டங்களுக்கு மேற்பார்வையாளராகவும் இருந்தார்.அவ்வளவு செல்வாக்காக இருந்தவரே பாஜகவுக்கு தாவியதால் திரிணாமுல் கட்சியில் பதற்றம் ஏற்பட்டது.
சுவெந்து தாவுவதற்கு முன்பு அவரை சமாதானப்படுத்த மம்தா எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கட்சி தாவிய சுவெந்து, திரிணாமுல் கட்சியில் இருந்து அடுத்தடுத்து சிலரை பாஜகவுக்கு இழுக்க முயற்சிக்கிறார். திரிணாமுல் கட்சியில் உள்ள நடிகர் ருத்ரானி கோஷ், 2 நாட்களுக்கு முன்பாக சுவெந்துவை சந்தித்திருக்கிறார். அதே போல், அரிந்தம் பட்டாச்சாரியா என்ற திரிணாமுல் முக்கியப் பிரமுகர் ஒருவரும் பாஜகவுக்கு தாவியுள்ளார். இப்போது ராஜிப் பானர்ஜியும் தாவலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில், சுவெந்துவுக்கு செக் வைக்க மம்தா பானர்ஜி தடலாடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதாவது சுவெந்துவின் சொந்த தொகுதியான நந்திகிராமம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது சுவெந்துவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது நந்திகிராமம் விவசாயிகளுக்காக பெரும் போராட்டம் நடத்தியே மம்தா ஆட்சிக்கு வந்தார். அந்த போராட்டத்துக்கு ஏற்பாடுகளை முன்னின்று நடத்தியவர் சுவெந்து. தற்போது நந்திகிராமம் மக்கள் யாரை ஆதரிப்பார்களோ!