இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் குளிரிலும் விடாது நடக்கிறது விவசாயிகளின் போராட்டம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. என்ன வேண்டுமானாலும் போராடுங்கள் என்று பாராமுகமாக இருந்த மத்திய அரசு திடீரென இறங்கி வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை இத்தனை நாட்கள் பிடிவாதமாக இருந்த மத்திய அரசு திடீரென இறங்கி வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டத்தை அமல்படுத்துவோம் அதற்குள் ஆற அமர உட்கார்ந்து பேசிக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது.
மத்திய அரசு திடீரென எப்படி ரிவர்ஸ் கியர் போட்டு இருப்பது பலருக்கும் வியப்பை அளித்திருக்கிறது. மோடி எப்படி இந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்ற கேள்விக்கு விடை காணும் ஆவலில் பலரும் உள்ளனர்புதிய வேளாண் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்ட நிலையில், அரசாங்கத்திற்கு இனி தவிர வேறு வழி இல்லை. எனவேதான் இந்த பின்வாங்கல் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
இன்னும் சிலரோ மோடி அரசு சும்மா ஒன்றும் இதைச் செய்யவில்லை அடுத்தடுத்து வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தான் இதற்கு காரணம். இந்தப் போராட்டம், அந்த மாநில தேர்தல்களில் ஒரு நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் அரசு வேளாண் சட்டத்தை அமல்படுத்த தங்கியிருக்கிறது என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.ஆர்.எஸ்.எஸ். தலையீட்டுக்குப் பிறகுதான் இது நடந்துள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் என்று பிரதமர் ஓயாமல் கூறி வருகிறார். மனதின் குரல் என்ற மன்கி பாத் நிகழ்ச்சியிலும் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுதேசி ஜாக்ரன் மஞ்ச் ( இது ஆர்.எஸ்.எஸ்.ன் ஒரு துணை அமைப்பு) தேசிய இணை அமைப்பாளரான அஸ்வினி மகாஜன் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானதுதான் .
அதேசமயம் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கருதுகிறோம்.இந்தச் சட்டங்கள் குறித்து மத்திய அரசு வெளிப்படையாக இருப்பதைத்தான் இந்த முடிவு காட்டுகிறது. இதை அரசு தன் நிலைப்பாட்டில் இருந்து விலகுவதாக எப்படி சொல்ல முடியும். கடந்த காலங்களில் கூட சில முடிவுகளை எடுத்து, அந்த முடிவுகளுக்குச் ஆட்சேபனைகள் எழுந்து அதைத் திரும்பப் பெற்றுள்ள நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன, இதற்கு எடுத்துக்காட்டாக மரபணு மாற்றப்பட்ட பயிர், நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்றவற்றைச் சொல்லலாம்.இதில் ஆர் எஸ் எஸ் அமைப்புக்குப் பங்கு எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
முன்னாள் பாஜக தலைவர் சுதீந்திர குல்கர்னியோ, இப்போதைக்கு இப்படி செய்வதை தவிர அரசுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை . இது பிரதமர் நரேந்திர மோடியின் இயல்புக்கு எதிரானது. அவர் முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டார் என்று சொல்வார்கள் ஆனால் இந்த விஷயம் அதற்கு முரண் பட்டதாகவே அமைந்துள்ளது. இந்த முடிவு அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்டது. இதைத் தவிர அரசுக்கு வேறு வழியே இல்லை . விவசாயிகள் இரண்டு மாதங்களாக, வன்முறை இன்றி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். பல நாடுகளில் இருந்தும் அரசின் முடிவுக்கு எதிர்வினைகள் வந்தன. உச்சநீதிமன்றக் குழு அமைக்கப்பட்டும் விவசாயிகள் அசரவில்லை. இதன் பின்னரே நிலைமையை அரசு புரிந்து கொண்டது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் ஒரு விஷயமும் சொல்லப்படுகிறது. ஜனவரி 26 ம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணியில் மிகப்பெரிய அளவில் வன்முறை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக புலனாய்வுத் துறை அளித்த ஒரு அறிக்கையே அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள் சிலர். விவசாயிகள் அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக்கொண்டால், ஜனவரி 26 ம் தேதி டிராக்டர் பேரணி நடத்தக்கூடாது என்று விவசாயிகளுக்கு அரசு நிபந்தனை விதிக்கவும் வாய்ப்பிருக்கிறது. முக்கியமான ஒரு அம்சத்தை கவனிக்க வேண்டும். அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை. விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்கவில்லை. இந்தச் சட்டங்களை 18 மாதங்களுக்கு செயல்படுத்த போவதில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவே. இந்த 18 மாதங்களில், பல மாநில தேர்தல்கள் முடிந்துவிடும்.
இந்தச் சட்டங்களை அடியோடு திரும்பப்பெறவேண்டும் . குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும் என்பதும்தான் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகள். ஆனால், அரசு, சட்டத்தையும் திரும்பப் பெறவில்லை, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதமும் அளிக்கவில்லை. அப்படி இருக்க இது பின்வாங்கல் அல்ல விவசாயிகளின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் போராட்டம் நிறுத்தப்பட்டால், அது அரசுக்கான வெற்றிதான். அதேசமயம் இந்தப் போராட்டத்தால் அரசுக்கு லாபம் எதுவுமில்லை, மாறாக பின்னடைவுதான் என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.
பாஜக மாநிலங்களவை உறுப்பினரான ராகேஷ் சின்ஹா இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, இரண்டு வழிகள் மட்டுமே உண்டு. அமைதியான முறையில் பேச்சு வார்த்தை அல்லது, அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலமான தீர்வு. ஆனால் மோடி அரசு பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தான் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறது. பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை வந்தபோதுதான் சட்டத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தது. நாட்டின் 11 கோடி விவசாயிகள் எங்களுடன் உள்ளனர், குலாக்குகள் எனப்படும் பெரு விவசாயிகள் மட்டுமே இதை எதிர்க்கின்றனர். இவர்களுக்கு பின்னால் இருந்து இயக்கும் சக்திகள், இந்தியாவைச் சீர்குலைக்க விரும்பும் வெளிநாட்டு சக்திகள் என்று சொல்லி இருக்கிறார்.
இப்படி எல்லா நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருந்த போதிலும் இன்னொரு பக்கம் விவசாயிகள் இந்த பதினெட்டு மாத தள்ளிவைப்பு திட்டத்தையும் ஏற்கத் தயாராக இல்லை விவசாய சங்கங்கள், இந்த திட்டத்தை நிராகரித்துள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா சங்கம்என்ற அமைப்பு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று நடந்த 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது விவசாயிகளின் பிடிவாதத்தை காட்டுகிறது. இனி அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.