குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பை நடத்தியதால், போலீசார் அதைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதை மீறி விவசாயிகள் சென்றதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.வேளாண் சட்டத்தை வாபஸ் பெற மறுக்கும் மத்திய அரசை கண்டித்து குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்துவோம் என்று ஏற்கனவே விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னர் 12 மணியளவில் டிராக்டர் அணிவகுப்பு தொடங்கும் என்றும் இதில் 2 லட்சம் டிராக்டர்கள் கலந்து கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் குடியரசு தின அணிவகுப்பு தொடங்குவதற்கு முன்பு இன்று காலை 8 மணி அளவிலேயே விவசாயிகள் டிராக்டருடன் டில்லி நோக்கிப் புறப்பட்டனர். சிங்கு- திக்ரி பகுதியில் வைக்கப்பட்டிருந்த போலீசாரின் தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து டிராக்டர்கள் சென்றன. இதையடுத்து போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். ஆனால் அதை மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டியடித்தனர். இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.