டெல்லி செங்கோட்டையில் நாங்கள் கொடி ஏற்றவில்லை விவசாய சங்கம் அறிவிப்பு

by Nishanth, Jan 27, 2021, 09:35 AM IST

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றியவர்களுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே விவசாயியின் மரணத்திற்கு போலீஸ் தான் காரணம் என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.நேற்றைய குடியரசு தினம் இந்தியாவின் கறுப்பு நாளாக மாறிவிட்டது. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கத்தினர் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் டெல்லி நகருக்குள் நுழைந்தது வரலாறு காணாத வன்முறையில் முடிந்தது.

தடையை மீறி சென்ற விவசாயிகளுக்கும், போலீசுக்கும் இடையே டெல்லியில் ஐடிஓ, காசிப்பூர், நாங்க்ளோய் உள்பட பல்வேறு பகுதிகளில் நேருக்குநேர் மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும் கல்வீச்சில் போலீசார் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இதற்கிடையே இந்த கலவரத்தில் ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான நவ்தீப் சிங் என்பவர் தான் மரணமடைந்தார். சமீபத்தில்தான் இவருக்குத் திருமணம் நடந்தது. நவ்தீப் சிங்கின் மரணத்திற்கு போலீஸ் தான் காரணம் என்று விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால் டிராக்டர் கவிழ்ந்து தான் விவசாயி இறந்ததாக போலீசார் கூறினர். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே டெல்லி செங்கோட்டையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கொடியை ஏற்றியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் கொடி ஏற்றப்பட்டதாகத் தகவல்கள் பரவின. ஆனால் அது காலிஸ்தான் அமைப்பின் கொடி அல்ல என்றும், சீக்கியர்கள் புனிதமாகக் கருதும் நிஷான் சாஹிப் கொடி என்றும் தெரியவந்தது. இது தவிர விவசாயிகள் சங்கத்தின் கொடியும் செங்கோட்டையில் ஏற்றப்பட்டது. செங்கோட்டையில் தேசியக் கொடிக்குப் பதிலாக வேறு கொடி ஏற்றப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கொடியை ஏற்றியவர்களுக்கும், தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தங்களுக்கிடையே ஊடுருவி சிலர் வன்முறையில் ஈடுபட்டனர் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று இரவில் விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடைபெற்ற இடத்திற்குத் திரும்பி விட்டனர். தற்போது டெல்லியில் அமைதி நிலவுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடும் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உள்துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையே கலவரத்தில் காயமடைந்த 18 க்கும் மேற்பட்ட போலீசார் டெல்லி எல்என்ஜிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏராளமான விவசாயிகளும் காயமடைந்துள்ளனர்.

You'r reading டெல்லி செங்கோட்டையில் நாங்கள் கொடி ஏற்றவில்லை விவசாய சங்கம் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை