செங்கோட்டை கலவரத்திற்கு பாஜகவுடன் தொடர்புடைய நடிகர் தான் காரணமா?

by Nishanth, Jan 27, 2021, 09:42 AM IST

டெல்லி செங்கோட்டையில் நடந்த கலவரத்திற்கு பஞ்சாபைச் சேர்ந்த நடிகரும், பாடகருமான தீப் சித்து தான் முக்கிய காரணம் என்று விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். செங்கோட்டையில் கலவரம் நடத்தி கொடியை ஏற்றியது நடிகர் தீப் சித்துவின் தலைமையில் செயல்பட்ட கும்பல் தான் என்றும், அந்தக் கும்பலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.செங்கோட்டையில் நேற்று நடந்த வன்முறையால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. நேற்று நடந்த வரலாறு காணாத வன்முறை மற்றும் கலவரத்தில் ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் மற்றும் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் சீக்கிய அமைப்பு மற்றும் விவசாய சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவும் கலவரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் கொடி கட்டியது தங்கள் அமைப்பு இல்லை என்று விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர். பஞ்சாப் நடிகரும், பாடகருமான தீப் சித்துவின் தலைமையில் உள்ள ஆட்கள் தான் கொடியை ஏற்றி வன்முறையில் ஈடுபட்டனர் என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், ரவுடிக் கும்பல் தலைவனாக இருந்து பின்னர் அரசியலில் நுழைந்த லாகா சித்தானா மற்றும் தீப் சித்து ஆகியோர் போராட்டம் நடப்பதற்கு முந்தைய நாள் விவசாயிகளை சந்தித்து வன்முறைக்கு தூண்டும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி பேசினர். தீப் சித்து செங்கோட்டையில் மைக்ரோபோனுடன் வந்திருந்தார். அவர் தான் விவசாய சங்கத்தினரை செங்கோட்டைக்கு அனுப்பினார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

யார் இந்த தீப் சித்து?

நடிகரும், மாடலும், பாடகருமான தீப் சித்து பஞ்சாப்பை சேர்ந்தவர். கடந்த 2015ல் தான் இவர் நடித்த முதல் சினிமா வெளியானது. ஆனாலும் 2018 ல் வெளியான படத்தின் மூலம் தான் இவர் பிரபலமடையத் தொடங்கினார். 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக இவர் தேர்தல் பிரசாரம் நடத்தினார். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஏராளமான சமூக ஆர்வலர்களும், நடிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். இப்படித் தான் நடிகர் தீப் சித்துவும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் தொடக்க முதலே சில விவசாய சங்கத்தினர் தீப் சித்துவின் ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவருக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் தொடர்பு உண்டு என்றும் அவர் அவர்களது ஏஜென்ட் என்றும் விவசாய சங்கத்தினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே தீப் சித்து பிரதமர் மோடி மற்றும் நடிகர் சன்னி தியோலுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தனக்கும், தீப் சித்துவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சன்னி தியோல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நடிகர் தீப் சித்துவுக்கும், பாஜகவுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்யும் சில புகைப்படங்களை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வெளியிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் தீப் சித்து இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

You'r reading செங்கோட்டை கலவரத்திற்கு பாஜகவுடன் தொடர்புடைய நடிகர் தான் காரணமா? Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை