சிங்குவில் மீண்டும் பதற்றம் விவசாயிகளுக்கு எதிராக கிராமத்தினர் போராட்டம்

by Nishanth, Jan 29, 2021, 15:09 PM IST

விவசாயிகளுக்கு எதிராக சிங்குவில் அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் அணிவகுப்பில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் விவசாயிகள் தாங்கள் போராட்டம் நடத்தி வரும் காசிப்பூர், திக்ரி மற்றும் சிங்கு பகுதிக்கு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் காசிப்பூர் பகுதியில் இருந்து விவசாயிகள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறி அந்த மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் சங்கத்தினருக்கு நோட்டீஸ் கொடுத்தது.

மேலும் அப்பகுதியில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்றிரவு உபி மாநில போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்றனர். ஆனால் விவசாயிகள் செல்ல மறுத்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இன்று அதிகாலை வரை போலீசின் முயற்சி பலிக்கவில்லை. இதையடுத்து காசிப்பூர் பகுதியிலிருந்து போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் திரும்பி சென்றனர். இந்நிலையில் நேற்று சிங்கு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேசியக் கொடியுடன் சென்று விவசாயிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று மதியமும் சிங்கு பகுதியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு சென்று விவசாயிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சரமாரியாக கல்வீச்சு நடந்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

You'r reading சிங்குவில் மீண்டும் பதற்றம் விவசாயிகளுக்கு எதிராக கிராமத்தினர் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை