ஆந்திராவில் நெகிழ்ச்சி.. முதியவர் சடலத்தை, சுமந்து சென்று இறுதி மரியாதை செய்த பெண் SI!

by Sasitharan, Feb 2, 2021, 19:38 PM IST

ஆந்திராவில் வயதான முதியவர் ஒருவரின் சடலத்தை, சுமந்து சென்று இறுதி மரியாதை செய்த பெண் உதவிக் காவல் ஆய்வாளர் செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிபக்கா நகராட்சியில், அதிவிக்கொத்துரு கிராமத்தில் விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்துக்கு நேற்று தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, காசிபக்கா காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரு சிரிஷா, முதியவரின் சடலத்தைப் பார்வையிட்டார். அப்போது, முதியவர் உடல் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி இருந்தது.

இதனையடுத்து, முதியவர் குறித்து விசாரித்ததில், யாசகர் என்று தெரியவந்தது. வேறு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. எனவே, முதியவருக்கு இறுதி மரியாதை செய்ய லலிதா சேரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு அழைத்து சிரிஷா பேசினார். முதியவரின் பிணம் இருந்த இடத்துக்கும், காவல் துறை வாகனத்துக்கும் சுமாராக ஒரு சில கிலோமீட்டர் தூரம் இருந்ததால், அவரின் சடலத்தை எடுத்துச் செல்ல கிராம மக்களிடம் உதவி கோரினார்.

யாரும் உதவிக்கு வராத நிலையில், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன், தானே சடலத்தைச் சுமந்து வந்த பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரு சிரிஷா, இறுதி மரியாதை செய்வதற்காக தனது சொந்த பணத்திலிருந்து சிறிது தொகை அளித்தும் உதவி செய்துள்ளார். காவல்துறை பெண் அதிகாரியின் இந்த செயல், ஆந்திரா மாநிலம் உட்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். ஆந்திரப் பிரதேசத்தின் காவல் துறையின் டிஜிபி கெளதம் சவாங் உட்பட பல்வேறு அதிகாரிகளும், பொது மக்களும் பெண் உதவி ஆய்வாளர் சிரிஷாவை பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஆந்திரப் பிரதேச காவல்துறை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், சிரிஷா முதியவரின் சடலத்தைச் சுமந்து சென்ற காணொளியைப் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளது. தற்போது, இந்த புகைப்படங்கள், கொணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரு சிரிஷா கூறுகையில், நான் என் கடமையை தான் செய்தேன். இதில் பெரிதாகக் குறிப்பிட என்ன இருக்கிறது. ஆனால், இதுதொடர்பாக உயரதிகாரிகள் என்னை பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, டிஜிபி இதுகுறித்து கேட்டுவிட்டு, ஒரு பெண்ணாக நீங்கள் இதை செய்தது பாராட்டுக்குரியது என்றார். நேரமும், தேவையும் ஏற்படும்போது தயக்கமின்றி சேவை செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டுள்ளது. இது காவல் பணியை விட மேலானது. இதுபோன்ற என் சேவைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

You'r reading ஆந்திராவில் நெகிழ்ச்சி.. முதியவர் சடலத்தை, சுமந்து சென்று இறுதி மரியாதை செய்த பெண் SI! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை