தலைநகர் டில்லி எல்லையில் இரு மாதங்களுக்கு மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்குச் சர்வதேச பாப் பாடகியான ரியான்னா ஆதரவு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற பாப் இசை பாடகி ரியான்னா ஒரு டிவி சேனலில் இணைய பக்கத்தில் வடி இடப்பட்டிருந்த விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து, ஏன் நாம் இது பற்றி பேசுவதே இல்லை? என்று ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுப் பதிவு செய்து இருந்தார்.
10 கோடிக்கும் அதிகமானோர் இவரை ட்விட்டரில் பின் தொடர்கின்றனர். போராட்ட விவகாரத்தை இவர் ட்வீட் செய்த சில நிமிடங்களிலேயே இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் அதை ரீ-ட்வீட் செய்தனர். சுமார் ஒரு லட்சம் பேர் அதற்குப் பதிலையும் தெரிவித்திருந்தனர்.புகழ் பெற்ற பார்ன் ஸ்டார் மியா கலிஃபாவும் தனது கருத்துகளை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் குறித்த படங்களைப் பகிர்ந்த அவர் கூலிக்காக போராடுபவர்கள் இவர்களா? எத்தகைய மனித உரிமை மீறல்கள் அங்கு நடக்கிறது? டெல்லியைச் சுற்றி அரசு இன்டர்நெட் சேவையை ஏன் முடக்கியிருக்கிறது? என்று கேட்டிருக்கிறார்.
அதேபோல், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான கிரெட்டா டூன்பெர்கும் "இந்த விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்," என்று பதிவிட்டிருக்கிறார். அவரது பதிவு 80 ஆயிரத்துக்கும் மேலாக ரீட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரியின் மகள் மீனா ஹாரிஸும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பதிவிட்டு இருக்கிறார். உலகின் மிகவும் பிரபலமான ஜனநாயக நாடான இந்தியாவில் விவசாயிகள் மீதான நடவடிக்கை எல்லை மீறி இருக்கிறது.இந்த வன்முறைக்கு எல்லோரும் கடும் கோபம் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.
சர்வதேச அளவில் பிரபலங்கள் இந்த போராட்டத்திற்காக ஆதரவு குரல் கொடுத்து வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரம் தொடர்பாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா மூலம் வெளியான அந்த அறிக்கையில், இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் மிகவும் குறைவான விவசாயிகள் மட்டுமே புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பதினோரு முறை இதுவரை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிரதமரின் சார்பில் அந்த சட்டங்களை ஒத்தி வைக்கும் திட்டமும் சொல்லப்பட்டிருக்கிறது . இதுபோன்ற விவகாரத்தில் பிரச்சனையின் ஆழத்தையும் உண்மையையும் புரிந்துகொண்டு அதன் பிறகு கருத்துகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்களின் கருத்துக்கு எதிராக பாலிவுட் பிரபலங்கள் திடீரென கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியுமான மனோஜ் திவாரி, ரியான்னாவின் ட்விட்டர் பதிவுக்கு பதில் தரும் வகையில் அவரது ட்விட்டர் முகவரியை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, ஒரு வீடியோவை ஷேர் செய்திருக்கிறார் . அதில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை சூழலில் ஒரு ஒரு போலீசாரை தடிகளைக் கொண்டு சிலர் தாக்குவது மற்றும் வேறு சில போலீசார் தாக்கப்படுவது போன்ற படங்களின் தொகுப்பு இடம் பெற்றிருக்கிறது.அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் ரியான்னா கட்டாயம் நான் இது பற்றி உங்களுடன் பேசவேண்டும் என்று மனோஜ் திவாரி பதிவிட்டிருக்கிறார்.பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்தியா மற்றும் இந்தியக் கொள்கை விவகாரங்களில் முன்வைக்கப்படும் தவறான பிரசாரத்துக்கு நீங்கள் இரை ஆகாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் அக்ஷய் குமாரோ, இந்திய நாட்டின் மிக முக்கியமான அங்கம் விவசாயிகள்தான். அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சி நடந்து வருகிறது. அமைதி வழியில் சமூக தீர்வு காணும் முயற்சிக்கு நாம் ஆதரவு அளிப்போம். அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பிளவுபடுத்தும் யார் மீதும் கவனம் செலுத்தக் கூடாது, என்று தெரிவித்திருக்கிறார்.தனது பதிவுடன் வெளியுறவுத்துறையின் அறிக்கையையும் அதன் லிங்கையும் இணைத்து அக்ஷய் குமார் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சுனில் ஷெட்டி, பாதி உண்மையை விட ஆபத்தானது எதுவுமில்லை. என்று கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது நாம் எப்போதும் போல் விஷயங்களைப் பற்றிய விரிவான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும் என்று சாடியிருக்கிறார்.பாலிவுட் பின்னணி பாடகர் கைலாஷ் கெர், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம் என்பதை அனைவருக்கும் உணர வைப்போம் என்று சொல்லியிருக்கிறார். இயக்குநர் கரன் ஜோஹர், " அனைவருக்குமான தீர்வை தேடுவதற்கு நம்மால் முடிந்த ஒவ்வொரு முயற்சியையம் இணைந்து செய்வோம் . நமது விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு. யாரும் நம்மைப் பிரிக்க விடமாட்டோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த பாலிவுட் பிரபலங்கள் எல்லோருமே #INDIATOGETHER என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தமது கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார்கள்.
இதில் உச்சமாக, நடிகை கங்கனா ரனாவத், ரியான்னாவுக்கு நேரடியாக கொடுத்த பதிலில், "அவர்களின் போராட்டம் குறித்து யாருமே பேசவில்லை. ஏனென்றால் அவர்கள் விவசாயிகளே அல்ல. இந்திய நாட்டை பிளவுபடுத்தும் தீவிரவாதிகள். அப்படிச் செய்தால் எங்களது தேசத்தை உடைத்து, அமெரிக்கா போல இந்தியாவைச் சீனா தனது காலணியாக்கிக் கொள்ளும். எனவே,முட்டாளே சும்மா இரு.. உன்னைப் போன்ற டம்மிகளுக்கு எமது நாட்டை விற்க மாட்டோம், என்று விளாசியிருக்கிறார்.
சர்வதேச புகழ் பெற்ற பாடகியான ரிஹன்னாவை முட்டாள் என்றும், போராடும் விவசாயிகளை "தீவிரவாதிகள்" என்றும் குறிப்பிட்டதால் கங்கனா ரனாவத் பரவலாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். டிரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியது போல கங்கனாவின் ட்விட்டர் பக்கத்தையும் முடக்க வேண்டும் என்ற கோஷம் டுவிட்டரில் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது.