டிரம்ப்புக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாரே? அது வெளிநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது. பலரும் அத்துமீறி டெல்லி செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியை ஏற்றினர். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 44 வழக்குப் போடப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிகானா, சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், ஹாலிவுட் நடிகை மியா கலிபா உள்ளிட்டோர் இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட் போட்டனர். இதற்கு மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்திருந்தார். ரிகானா உள்ளிட்டோருக்கு பாஜகவின் ஆதரவு இந்திய பிரபலங்கள் ட்விட்டரில் கடுமையான வாசகங்களுடன் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர், இந்த முறையும் டிரம்ப் ஆட்சிதான் என்று பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனது பதிவுகளில் கூறியிருப்பதாவது:நமது தேசபக்தர்கள் சிலர், ஆப் கி பார்.. டிரம்ப் சர்க்கார்.. என்று சொன்னதற்கு என்ன பொருள்? அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பர் கொடூரமாக தாக்கப்பட்ட போது, நாம் ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்தோமே? அது வெளிநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகாதா? ஆனால், ரிகானா, கிரேட்டா தர்பர்க் ஆகியோரை மட்டும் ட்விட்டரில் வறுத்தெடுப்பது ஏன்? இப்போது உலகம் மிகவும் சிறிய கிராமம் போல் ஆகி விட்டது. எதற்காக மற்றவர்களின் விமர்சனத்திற்கு பயப்பட வேண்டும்? விவசாயிகள் அளித்த உணவை உண்டுதான் நாம் வாழ்கிறோம். அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்.
இவ்வாறு ஆதிர்ரஞ்சன் கூறியிருக்கிறார்.