விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது கடந்த குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து இன்று கைது செய்யப்பட்டார்.கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத கலவரம் வெடித்தது. செங்கோட்டையில் சீக்கிய கொடி ஏற்றப்பட்டது.
போலீஸ் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சூறையாடப்பட்டன. தடியடி மற்றும் கல்வீச்சில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பஞ்சாப் நடிகர் தீப் சித்து தான் காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். அவர் தான் விவசாயிகளை தவறாக வழிநடத்திச் சென்றார் என்றும் கூறப்பட்டது.இதையடுத்து நடிகர் தீப் சித்து உள்பட 3 பேர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே தீப் சித்து தலைமறைவானார்.
கடந்த சில தினங்களாக அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். தீப் சித்துவை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவர் சமூக இணையதளங்களில் தன்னுடைய வீடியோவை பகிர்ந்தார். அதில் கலவரத்திற்கு விவசாயிகள் தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் டெல்லி போலீசாரின் தீவிர விசாரணையில் இன்று தீப் சித்து கைது செய்யப்பட்டார். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் எனக் கருதப்படுகிறது.