சென்னை டெஸ்டில் இன்று காலை ஆட்டம் தொடங்கிய உடன் இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா, சுப்மான் கில், ரகானே மற்றும் பந்த் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இந்தியா தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு 420 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்தது. இந்த கடினமான வெற்றி இலக்குடன் நேற்று இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கியது. ஆனால் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 12 ரன்களில் ரோகித் சர்மா ஜேக் லீச்சின் பந்தில் கிளீன் பவுல்டாகி ஆட்டமிழந்தார்.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர் கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். நேற்று அதன்பின்னர் இந்தியாவுக்கு எந்த விக்கெட்டும் போகவில்லை. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில் 420 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியா சென்று கொண்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் இந்தியா சாகச வெற்றி பெற்றிருந்ததால் இந்தப் போட்டியிலும் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்துடன் இந்திய வீரர்கள் விளையாடி வந்தனர். ஆனால் இன்று காலையிலேயே இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கிடைத்து வந்தது. புஜாரா 15 ரன்களில் ஜேக் லீச்சின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கில்லுடன் கேப்டன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சுப்மான் கில் அரை சதம் அடித்தார். ஆனால் அவர் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்தில் கிளீன் பவுல்டாகி ஆட்டமிழந்தார். இதன் பின்னர் துணை கேப்டன் ரகானே, கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார்.
ஆனால் அவரும் நிலைத்து நிற்கவில்லை. ரன் ஏதும் எடுக்காமலேயே ஆண்டர்சனின் பந்தில் கிளீன் பவுல்டாகி ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கோஹ்லியுடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 11 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்தில் ஆட்டமிழந்தார். 110 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டதால் இந்த போட்டியில் இந்தியா தோல்வி பெறவே அதிக வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் லீச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.