தேர்தல் முடிவதற்கு முன் மம்தா பானர்ஜி ஜெய்ஸ்ரீராம் என கண்டிப்பாக அழைப்பார் அமித் ஷா சபதம்

by Nishanth, Feb 11, 2021, 17:34 PM IST

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவதற்கு முன் மம்தா பானர்ஜி ஜெய்ஶ்ரீராம் எனக் கண்டிப்பாக கோஷம் எழுப்புவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கூச் பெஹாரில் நடந்த தேர்தல் பேரணியைத் தொடங்கி வைத்த போது அமித்ஷா இவ்வாறு பேசினார்.மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற ஒரே குறிக்கோளுடன் பாஜக களத்தில் இறங்கியுள்ளது. இதனால் பாஜகவின் தேசிய தலைவர்களான நட்டா, அமித் ஷா, பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் மேற்கு வங்க மாநிலத்தை முற்றுகையிட்டு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் திட்டத்தையும் பாஜக செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஒரு சில மாதங்களில் திரிணாமுல் கட்சியில் இருந்து ஏராளமான முக்கிய தலைவர்கள் பாஜகவுக்குத் தாவியுள்ளனர். மம்தாவும் பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் கொல்கத்தாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் எனக் கோஷமிட்டனர். இதைக் கேட்டு கோபமடைந்த மம்தா பானர்ஜி, தன்னுடைய பேச்சைப் பாதியில் நிறுத்தி தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தாவில் உள்ள கூச் பெஹாரில் பாஜக பேரணியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: மேற்கு வங்க மாநில தேர்தல் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், மம்தா பானர்ஜியின் அழிவுத் திட்டங்களுக்கும் இடையே உள்ள போராட்டமாக இருக்கும். ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினால் மம்தாவுக்குக் கோபம் வருகிறது. ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை இந்தியாவில் எழுப்பாமல் பாகிஸ்தானில் போயா எழுப்ப முடியும்?. ஜெய் ஸ்ரீ ராம் என்ற இந்த மந்திரம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் எப்படி குற்றமாக மாறுகிறது எனத் தெரியவில்லை. சட்டமன்ற தேர்தல் முடிவதற்குள் மம்தாவும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற மந்திரத்தை முழங்கத் தொடங்கி விடுவார். மக்களின் நலனுக்காகத் தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

ஆனால் மம்தா பானர்ஜி அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியின் வளர்ச்சிக்காக மட்டுமே செயல்படுகிறார். அபிஷேக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தான் பல திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க யாராலும் முடியாது. வன்முறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவது தான் பாஜகவின் லட்சியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

You'r reading தேர்தல் முடிவதற்கு முன் மம்தா பானர்ஜி ஜெய்ஸ்ரீராம் என கண்டிப்பாக அழைப்பார் அமித் ஷா சபதம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை