மாநில அரசின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் பிரதிநிதிகளின் கீழ் ஆட்சி நடத்தப் பார்க்கிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக நியமித்த டெல்லியின் துணை நிலை ஆளுநர் அஜித் பைஜல், எதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறார் என்பது குற்றச்சாட்டு.
இதனால், டெல்லியில் யார் சொல்வதுபடி ஆட்சி நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. இந்த விஷயம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, ஆளுநருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் “மாநில அரசின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது.
டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கூட்டானது. மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட முடியும்” என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.