3 மாதங்களில் உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
போலீசார் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது தான் முதல் வேலை. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அவர்களால் எந்த வேலையும் சுறுசுறுப்பாக செய்ய முடியும். ஆனால், நடைமுறையில் பெரும்பாலான போலீசார் உடலை கட்டுப்கோப்பாக வைப்பதில்லை. தொப்பையுடன் இருக்கும் பல போலீசை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில், தொப்பையை குறைக்க போலீசாருக்கு கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ரிசர்வ் போலீஸ் பட்டாலியன் பிரிவில் பல்லாயிரக்கணக்கான போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் தொப்பை வைத்திருப்பதால், அவர்கள் விரைவில் தொப்பையை குறைக்க வேண்டும் என்று கடுமையான உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி பாஸ்கர்ராவ் கூறுகையில், “போலீசார் அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும். பல போலீசார் தங்களது உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதில்லை. மது குடிப்பது முறையற்ற உணவு, புகை பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவற்றை கடைபிடிக்கிறார்கள். இதனால், 40 முதல் 50 வயதுக்குள் நோய் வந்து மரணமடைகின்றனர்.
இதனால், அடுத்த 3 மாதங்களுக்குள் உடற்பயிற்சி மேற்கொண்டு தொப்பையை குறைக்க வேண்டும். அவ்வாறு குறைக்காத போலீசார் மீது பணி நீக்கம், பணி மாற்றம் உள்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் ” என்று எச்சரித்தார்.