தந்தை ஸ்தானத்தில் ஸ்ரீனிவாசன்.. சென்னை அணியுடன் மோதல்?!.. மனம் திறந்த சுரேஷ் ரெய்னா!

by Sasitharan, Sep 2, 2020, 20:00 PM IST

ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. இவரின் விலகலுக்கு தோனியால் வந்த சண்டை தான் காரணம் என்றும், அதனால் அணி நிர்வாகத்துக்கும் ரெய்னாவுக்குமான கருத்து வேறுபாடுதான் காரணம் என்று கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓனர் ஸ்ரீனிவாசனின் பேட்டி. ``என்னைப் பொறுத்தவரை யாருக்காவது தயக்கம் இருந்தாலோ, திருப்தி இல்லையென்றாலோ விலகிவிடுங்கள் என்றே கூறுவேன். நான் யாரையும் எதையும் செய்ய வலியுறுத்தியதில்லை. சில நேரங்களில் சிலருக்கு வெற்றி தலைக்கு ஏறிவிடுகிறது. இன்னும் ஐபிஎல் சீசன் தொடங்கவே இல்லை. அதற்குள் ரெய்னா விலகிவிட்டார். இதனால் பணம் உட்பட எதையெல்லாம் இழக்கப்போகிறோம் என்பது ரெய்னாவுக்கு விரைவாகவே புரியும்" என்று பேட்டியில் காட்டமாக கூறியிருந்தார். பின்னர் அந்த பேச்சை மாற்றியும் பேசியிருந்தார் ஸ்ரீனிவாசன்.

இது பலத்த அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரெய்னா தற்போது மனம் திறந்துள்ளார். ndtv மற்றும் cribuzz தளங்களுக்கு பேசியுள்ள ரெய்னா, ``இந்தியா திரும்பியது எனது தனிப்பட்ட முடிவு. இந்த முடிவை என் குடும்பத்தின் நலன் கருதியே எடுத்தேன். அதேவேளையில், சென்னை அணியும் எனது குடும்பம்தான். தோனியும் என் வாழ்வில் எனக்கு மிக முக்கியமான மனிதர்.

அதனால் நான் எடுத்த இந்த முடிவு சற்றுக் கடினமானதாகவே இருந்தது. ஆனால் எனக்கும் சென்னை அணிக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்களே சொல்லுங்கள் காரணமே இல்லாமல் யாரவது 12.5 கோடி ரூபாய் வேண்டாம் என வருவார்களா. நான் சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஓய்வு பெற்றிருக்கிறேன். ஆனால் அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன்" என்றவர் ஸ்ரீனிவாசன் குறித்தும் பேசினார். அதில், ``என் தந்தை ஸ்தானத்தில் ஸ்ரீனிவாசனை நான் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை எப்போதும் என்னுடன் துணை நின்றுள்ளார். என்னை தனது இளைய மகனாகத்தான் ஸ்ரீனிவாசன் கருதுகிறார். அவர் என்னைப் பற்றி கொடுத்த பேட்டியில் அவர் சொன்ன பல விஷயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. என்னை பொறுத்தவரை ஒரு தந்தைக்கு தனது மகனைத் திட்டும் உரிமை இருக்கிறது. பேட்டியில், நான் இந்தியா திரும்பியதற்கான காரணம் தெரியாமல் சில விஷயங்களைப் பேசிவிட்டார். ஆனால் இப்போது அதன்விவரங்கள் தெரிந்தபிறகு எனக்கு மெசேஜ் அனுப்பினார்.

அப்போது என்னுடைய சிக்கல் மற்றும் அணியின் எதிர்காலம் என பல விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் பேசினோம். இந்த சீசனிலேயே நான் மீண்டும் ஆடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதற்காக நான் இப்போது க்வாரன்டீனில் இருந்தாலும் வழக்கமான எனது பயிற்சி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் என்னை அணியில் பார்க்க வாய்ப்பிருக்கிறது" என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Get your business listed on our directory >>More Ipl league News