ஐபிஎல் தொடரில் எந்த வகை பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின் 13வது தொடர், துபாய், அபு தாபி மற்றும் சார்ஜா ஆகிய ஐக்கிய அமீரக மைதானங்களில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி அபு தாபியில் நடக்கிறது. மூன்று இடங்களே விளையாட பயன்படுத்தப்படும் நிலையில் தற்போது நிலவும் வானிலையை கொண்டு பந்துவீச்சை ஓரளவு கணிக்க முடிகிறது என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.
துபாயில் 24 போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கு நான்கு விக்கெட்டுகளே (பிட்ச்) பயன்படுத்தப்பட உள்ளன. ஆகவே, ஒரு விக்கெட்டில் ஐந்து அல்லது அதற்கு மேலான போட்டிகள் நடத்தப்படும். தற்போது நிலவும் சூழ்நிலையின்படி, போட்டியின் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும். போட்டியின் மைய பகுதிக்குப் பிறகு குறைந்த வேகம் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு எடுபடக்கூடும். ஆனாலும், விளையாட ஆரம்பிக்கும்போதுதான் அணியினரால் நிலையை சரியாக கணிக்க இயலும் என்று மெய்நிகர் (வெர்ச்சுவல்) செய்தியாளர் சந்திப்பின்போது பாண்டிங் தெரிவித்துள்ளார்.