தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் சென்னை கேப்டன் தோனிக்கு அடுத்தபடியாக பஞ்சாப் கேப்டன் ராகுலையும் பழிவாங்கியுள்ளார் சஞ்சு சம்சன்.ஐபிஎல் 13 வது சீசனில் தற்போது சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தைப் பற்றித் தான் பலரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். 6 வருடங்களுக்கு முன்பே அதாவது சரியாகச் சொன்னால் 2014ம் ஆண்டு சஞ்சு இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் பல வருடங்களுக்குப் பின்னர் தான் களத்தில் இறங்கி விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிறப்பு விருந்தினர் போலத் தான் அவ்வப்போது இவர் அணியில் இடம் பெற்று வருகிறார்.
அப்போது இந்திய அணியில் தோனி அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். எனவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சுவால் எளிதில் கடைசி 11 வீரர்கள் பட்டியலில் இடம் பெற முடியாத நிலை இருந்தது. வேண்டுமென்றே அவர் செய்யாவிட்டாலும் தன்னுடைய அரங்கேற்றத்தைத் தாமதப்படுத்திய தோனியை விக்கெட்டுக்கு பின்னால் சாட்சியாக வைத்துத் தான் சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சு 74 ரன்கள் குவித்தார். அன்றைய போட்டியில் இவர் 32 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் ராஜஸ்தானிடம் சென்னை படுதோல்வி அடைந்தது. இனி அடுத்த பிளாஷ்பேக்கை பார்ப்போம்.... இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெலிங்டனில் 20-20 போட்டி நடந்தது.
அந்தப் போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவருக்கு சென்றது. அப்போது ராகுலுடன் முதல் விக்கெட்டுக்கு சஞ்சுவை களத்தில் இறக்க கோஹ்லி தீர்மானித்திருந்தார். ஆனால் அனுபவம் இல்லாத சஞ்சுவுடன் ஒன்றாகக் களத்தில் இறங்க ராகுலுக்கு விருப்பமில்லை. இது குறித்து அவர் கோஹ்லியிடம் கூறினார். இதையடுத்து ராகுலுடன் கோஹ்லி களமிறங்கினார். அன்று அனுபவக் குறைவு என்று கூறி தன்னுடன் இணைந்து விளையாட மறுத்த அதே ராகுலை விக்கெட்டுக்கு பின்னால் சாட்சியாக நிறுத்தி இம்முறை 85 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியைத் தோற்கடிக்க சஞ்சு முக்கிய காரணமாக அமைந்தார். தோனியையும், ராகுலையும் காத்திருந்து பழிவாங்கிய சஞ்சு சாம்சனின் திறமையைக் குறித்துத் தான் இப்போது அனைவரும் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.