அடுத்த தோனியாக யாராலும் ஆக முடியாது சஞ்சு சாம்சன் சொல்கிறார்

No one can and no one should try to play like dhoni, sanju samson

by Nishanth, Sep 30, 2020, 12:22 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனியாக நான் விரும்பவில்லை, அது என்னால் மட்டுமல்ல, யாராலும் முடியாது என்று சொல்கிறார் ராஜஸ்தான் ஐபிஎல் வீரர் சஞ்சு சாம்சன்.


ஐபிஎல் 13 வது சீசனில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. ஆடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இந்த அணி முதல் இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் சாம்பியன் அணி சென்னையையும், 2வது போட்டியில் பஞ்சாப்பையும் தோற்கடித்தது. இந்த இரண்டு போட்டிகளிலுமே ராஜஸ்தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். முதல் போட்டியில் சென்னைக்கு எதிராக 74 ரன்களும், 2வது போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக அவர் 85 ரன்களும் குவித்தார்.
சஞ்சுவின் சிறப்பான அதிரடி ஆட்டத்தை பாராட்டாதவர்களே இல்லை எனக்கூறலாம். சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே, கவுதம் காம்பீர் உள்பட பிரபல நட்சத்திரங்கள் சஞ்சுவின் அதிரடி ஆட்டத்தை புகழ்ந்துள்ளனர். சஞ்சுவை இன்னும் இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்தரமாக சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் அடுத்த தோனியாக வருவார் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் உட்பட பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் கவுதம் காம்பீர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் அடுத்த தோனியாக வேண்டிய அவசியம் இல்லை. அவர் சஞ்சுவாக இருந்தாலே போதும் என்று அவர் கூறினார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஒரு மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது: என்னை இந்திய அணியின் அடுத்த தோனி என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. நான் அடுத்த தோனியாக முயற்சிக்கவில்லை. என்னால் மட்டுமல்ல, யாராலும் தோனியை போல ஆக முடியாது.


அவரைப் போல ஆடுவது அவ்வளவு எளிதல்ல. அதனால் அவரது இடத்தை அடைய முயற்சிக்காமல் இருப்பது தான் நல்லது. தோனியைப் போல விளையாட வேண்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்திய கிரிக்கெட்டில் அவர் ஒரு சகாப்தம் ஆவார். நான் தற்போதைக்கு என்னுடைய விளையாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். கிரிக்கெட்டில் என்னால் என்ன செய்ய முடியும் என்பதுதான் என்னுடைய இப்போதைய சிந்தனையாகும். நான் எந்த அணியில் விளையாடுகிறேனோ அந்த அணிக்கு எப்படி வெற்றியை பெற்றுக் கொடுக்கலாம் என்பது தான் என்னுடைய எண்ணமாக உள்ளது என்று அவர் கூறினார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Ipl league News

அதிகம் படித்தவை