தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு கொல்கத்தா அணி கேப்டனாக ஒயின் மோர்கனை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறுகிறார்.
சார்ஜாவில் சனிக்கிழமை நடந்த போட்டியில் டெல்லி அணியிடம் கொல்கத்தா தோல்வி அடைந்தது. ரன்களை குவிக்கக் கூடிய சார்ஜா மைதானத்தில் டாஸ் கிடைத்தும் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், டெல்லி அணியை பேட்டிங் செய்ய விட்டார். முதலில் பேட் செய்த அந்த அணி 228 ரன்கள் குவித்தது. அந்த இமாலய ஸ்கோரை எட்ட முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வியடைந்தது. மேலும் அந்த போட்டியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த போட்டியில் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் அணுகுமுறையில் ஏற்பட்ட சில குளறுபடிகள் மற்றும் பேட்டிங்கில் அவரால் சோபிக்க முடியாமல் போனது ஆகியவை தான் கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். 2018ம் ஆண்டில் தான் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த சீசனில் இந்த அணி பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றது. ஆனால் கடந்த சீசனில் இந்த அணியால் கடைசி 4 இடத்திற்கு வரமுடியாமல் போனது. தற்போதைய சீசனிலும் கொல்கத்தாவின் தொடக்கம் திருப்திகரமாக இல்லை.
இந்நிலையில் கொல்கத்தாவின் கேப்டன் பொறுப்பை தினேஷ் கார்த்திக்கிடமிருந்து பறித்து அனுபவம் வாய்ந்த ஒயின் மோர்கனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது: கடந்த சில போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அவர் இனியும் கேப்டனாக நீடித்தால் அணியின் வெற்றி வாய்ப்பு குறையும். எனவே அனுபவம் வாய்ந்த ஒயின் மோர்கனிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். உலக கோப்பையை வென்ற ஒயின் மோர்கன் கொல்கத்தா அணியின் தலைமையை ஏற்றால் நிச்சயமாக நல்ல மாற்றங்கள் இருக்கும். ரோகித் சர்மா, தோனி, விராட் கோஹ்லி ஆகியோரைப் போன்ற அனுபவம் வாய்ந்த கேப்டன்கள் தான் கொல்கத்தா அணிக்கு தற்போது சூழ்நிலையில் தேவையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலமுறை மோசமாக ஆடியும் ஓப்பனிங்கில் சுனில் நரேனுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பதற்கு கொல்கத்தா ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள கொல்கத்தா இதுவரை இரண்டு வெற்றிகளும், இரண்டு தோல்விகளும் அடைந்துள்ளன. வரும் போட்டிகளிலும் இந்த அணி தோல்வி அடைந்தால் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.