2010 ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தொடக்கத்தில் மிக மோசமாக ஆடி பல போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் இரண்டாவது கட்டத்தில் அபாரமாக ஆடி கோப்பையைக் கைப்பற்றியது போல இந்த முறை நடக்க வாய்ப்பில்லை என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறுகிறார்.2010ல் நடந்த ஐபிஎல் 3வது சீசனில் சென்னை அணியின் தொடக்கம் மிக மோசமாக இருந்தது. முதல் 7 போட்டிகளில் ஐந்திலும் தோல்வியடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த சீசனில் சென்னை அணி பிளே ஆஃபுக்கு கூட தகுதி பெறாது என்றே பலரும் கருதினர்.
ஆனால் அதன் பின்னர் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆடிய சென்னை அணி பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றது. கடைசியில் அந்த சீசனில் சென்னை கோப்பையையும் கைப்பற்றியது. இதேபோல இந்த சீசனிலும் முதல் 7 போட்டிகளில் ஐந்தில் தோற்று இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. 2010 ல் நடந்தது போலவே இம்முறையும் சென்னையின் தொடக்கம் நன்றாக இல்லை. அதே போல முதல் 7 போட்டிகளில் ஐந்திலும் தோற்றதாலும் 2010ஐ போலவே இம்முறையும் சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றும் என அதன் ரசிகர்கள் நம்புகின்றனர்.
ஆனால் அது வெறும் கனவு மட்டும் தான், இந்த முறை 2010ல் நடந்தது போலச் சென்னை அணியால் கோப்பையைக் கைப்பற்ற முடியாது என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறுகிறார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில் கூறியதாவது: 2010ல் சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றியது போல 2020லும் கோப்பையைக் கைப்பற்றும் எனக் கூற முடியாது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, அன்று இரண்டாவது கட்டத்தில் பெரும்பான்மையான போட்டிகளும் நாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் விளையாடினோம்.
அது சென்னையின் கோட்டை என்று அனைவருக்கும் தெரியும். இரண்டாவதாக அன்று சென்னை அணியில் இருந்த வீரர்கள் அனைவரும் நல்ல உடல் திறனுடன் இருந்தனர். அது மட்டும் இல்லாமல் அன்று பெரும்பாலான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தனர். அவர்கள் அனைவரும் நல்ல பார்மிலும் இருந்தனர். ஆனால் தற்போது இந்த சாதகமான காரணங்கள் எதுவும் சென்னைக்கு இல்லை. எனவே இந்த முறை சென்னை அணி வெற்றி பெறுவது மிகவும் சிரமமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.