கெய்ல் வந்தார் பஞ்சாப்புக்கு வெற்றி மேல் வெற்றி..

by Nishanth, Oct 27, 2020, 11:10 AM IST

கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியில் இணைவதற்கு முன்பு அந்த அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அவர் அணிக்கு வந்த பின்னர் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடத்திற்குள் நுழைந்துள்ளது.

இதுவரை நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 2014ம் ஆண்டில் மட்டுமே பஞ்சாப் அணி மிகச் சிறப்பாக ஆடியது. அப்போதைய 7வது சீசன் போட்டியில் 17 போட்டிகளில் ஆடி 5ல் மட்டுமே பஞ்சாப் தோல்வியடைந்தது. அந்த சீசனில் பஞ்சாப் இறுதிச் சுற்றிலும் நுழைந்தது. இறுதிப் போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது. அந்த ஒரு சீசனில் மட்டும் தான் பஞ்சாப் மிகச் சிறப்பாக ஆடியது. இதுதவிர முதல் சீசன் நடந்த 2008ல் 15 போட்டிகளில் 10 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதி வரை சென்றது. அந்த சீசனில் பஞ்சாப் 3வது இடத்தை பிடித்தது. இது தவிர மீதமுள்ள 11 சீசனிலும் பஞ்சாபின் ஆட்டம் அவ்வளவாக சிறப்பானதாக இல்லை என்றே கூறவேண்டும். பெரும்பாலும் அந்த அணி 5 முதல் 8வது இடங்களிலேயே வந்து கொண்டிருந்தது. இந்தச் சீசனிலும் தொடக்கத்தில் பஞ்சாபின் ஆட்டம் குறிப்பிடும் வகையில் அமையவில்லை. ரன் வேட்டையில் பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகிய இருவரும் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளனர்.

இதேபோல பந்துவீச்சிலும் பஞ்சாப் வீரர் முகமது ஷமி இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆனால் இதனால் பஞ்சாப் அணிக்கு எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இந்த அணி மிக பரிதாபகரமான நிலையில் இருந்தது. இந்த சமயத்தில் தான் இந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் அணியில் இணைந்தார். அவர் வந்த பின்னர் பஞ்சாப் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் தற்போது 4வது இடத்தை பிடித்துள்ளது.நேற்றைய போட்டி ஷார்ஜாவில் நடந்த போதிலும் கொல்கத்தா அணியால் 149 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சே இதற்கு காரணமாகும். குறிப்பாக முகமது ஷமியின் பந்துவீச்சு நேற்று அபாரமாக இருந்தது. நேற்று இவர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் பின்னர் 150 என்ற இலக்குடன் பஞ்சாப் களத்தில் இறங்கியது.

நேற்று கே.எல். ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக மந்தீப் சிங் இறங்கினார். மாயங்க் அகர்வால் நேற்று ஆடவில்லை. இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த போதிலும் கே எல் ராகுல் 28 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தியிடம் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ராகுல் ஆட்டமிழந்த பின்னர் மந்தீப் சிங்குடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இதன் பின்னர் தான் பஞ்சாபின் அதிரடி ஆட்டம் தொடங்கியது. மளமளவென சிக்சர்கள், பவுண்டரிகள் என விளாசி கெய்ல் 25 பந்தில் அரைசதத்தை கடந்தார். முதலில் மந்தமாக ஆடிய மந்தீப் சிங்கும் பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 49 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். இருவரும் சேர்ந்து 60 பந்துகளில் 100 ரன்களை சேர்த்தனர். இறுதியில் வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில் கெய்ல் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 18. 5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. கெய்ல் வந்த பின்னர் தான் பஞ்சாப் அணிக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. எனவே இந்த முறை கோப்பை தங்களுக்குத் தான் என்று பஞ்சாப் ரசிகர்கள் நம்புகின்றனர்.

You'r reading கெய்ல் வந்தார் பஞ்சாப்புக்கு வெற்றி மேல் வெற்றி.. Originally posted on The Subeditor Tamil

More Ipl league News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை