ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சேத்தன் சர்காரியாவின் பந்துவீச்சு வீரேந்திர சேவாக்கை கவர்ந்துள்ளது. இது தொடர்பாக அவர் சர்காரியா குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார்.
20லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் 1.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் சேத்தன் சக்காரியா. சர்காரியா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் உள்ளூர் போட்டிகளில் செளராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். அதன்பின்னர் தொழில்முறை கிரிக்கெட்டராக மாறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்ககு எதிராக அவர் ஆடிய முதல் போட்டியே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதி ஓவர்களில் கே.எல்.ராகுல், ரிச்சர்ட்ஸன் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17வது ஓவரில் 15 ரன்களை விட்டுக்கொடுத்த சர்காரியாக 20-வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ஓவர்கள் வீசிய சர்காரிய 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சேத்தன் சர்காரியாவின் இந்த ஆட்டம் சேவாக்கை மிகவும் கவர்ந்துள்ளது. இதுகுறித்து பேசிய சேவாக், “ இவரது பெயரை இதற்கு முன்பாக கேட்டிருக்கிறேன். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவரது பந்துவீச்சை பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் இந்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் வேறு விதமான பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் வேறு விதமான பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். இங்கு பெரிய மற்றும் புகழ்மிக்க பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். அவரது மனநிலையை பார்க்கவேண்டுமே. அவர் அச்சமின்றி இருந்தார்.
ஒரு பந்துவீச்சாளராக உங்களது பந்து பவுண்டரிக்கு அடிக்கப்படுவதை குறித்து ஒருபோதும் பயப்படக்கூடாது என ஜாகீர் கானும், நெஹ்ராவும் கூறுவார்கள். நீங்கள் அடிப்படாதவரை உங்களால் கற்றுக்கொள்ளவும் முடியாது விக்கெட்டுகளை எடுக்கவும் முடியாது. நேற்று சர்காரியா அந்த மாதிரியான மனநிலையைத்தான் வெளிப்படுத்தினார் என்று நான் நினைக்கிறேன்.
அவரது பந்துவீச்சில் நிறைய மாறுபாடுகள் இருந்தன. ஒரு சில நோபால்களை வீசினாலும் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பந்து வீசினார். மய்ங்க் அகர்வாலை அவுட்டாக்கிய விதம், கிறிஸ் கெய்லுக்கு வீசிய ஒரு பந்தில் ஆச்சரியப்படுத்தினார். அவர் என்னை இம்பிரஸ் செய்துவிட்டார்” என சேவாக் கூறியுள்ளார்.