கே.எல்.ராகுல் கேப்டன்சியை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா. கே.எல்.ராகுலால் பந்து வீச்சை சரியாக நிர்வகிக்க முடியவில்லை, என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 221 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட தோல்வியைத் தழுவ நேரிட்டது. பிறகு கடைசியில் வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ். அடுத்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 195 ரன்கள் குவித்தும் தோல்வி கண்டது. இந்நிலையில் கே.எல்.ராகுலின் கேப்டன்சியை விமர்சித்துள்ளளார் முன்னாள் இடது கை பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா.
``இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரரும் நன்றாக பேட் செய்ய வேண்டும் என்றே விரும்புவர், நன்றாக பவுலிங், பீல்டிங் செய்ய வேண்டியதும் அவசியம். சில நாட்கள் நமக்கான நாளாக அமையாது என்பது உண்மைதான், ஆனால் எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கவே செய்யும்.
நிறைய விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் நாம் கட்டுப்படுத்தக் கூடிய விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. அதைக் கூட சரியாகச் செய்யாவிட்டால் எப்படி? அதிக பணம் கொடுத்து சில பவுலர்களை ஏலம் எடுக்கின்றனர். ஆனால் அவர்களை தொடக்க ஓவர்களை வீசச் செய்யாமல் சொதப்பியது ஏன்? ரைலி மெரிடித் 10வது ஓவருக்குப் பிறகு பந்து வீசினார். வந்தவுடன் ஸ்மித்தை வெளியேற்றினார்.
ஷமி 4 ஓவர்களையும் வெவ்வேறு தருணங்களில் வீசுகிறார். ஷமியுடன் அர்ஷ்தீப் சிங்கை தொடக்கத்திலேயே வீசச் செய்து விட்டால் பிறகு போட்டியை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்.
முதல் 4 ஓவர்களை 4 பவுலர்கள் வீசுகின்றனர், பவுலிங் திறமை இல்லாத அணிதான் இப்படி பவுலர்களைப் பயன்படுத்தும். மொத்தத்தில் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியினர் பவுலிங் திட்டத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் செயல்படுத்துவதிலும் சோடை போய் குழம்பிப் போயுள்ளனர் என்று சாடினார் ஆஷிஷ் நெஹ்ரா.