பெட்ரோல் இல்லை... புகையும் இல்லை... வண்டி ரெடி!

three-wheeled solar vehicle needs to be recharged only once every 15 days

by SAM ASIR, Jan 30, 2019, 19:21 PM IST

"பெட்ரோல் விலை தினசரி ஏறுது" "ஒரே ட்ராபிக்... காரை திருப்புறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு" சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களின் அலுப்பு இது. அதுவும் பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னை.

இதைப் பற்றி எல்லோருமே யோசிக்கிறோம். பெங்களூருவில் பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த பைரே கௌடா என்ற மாணவரும் இப்படி யோசித்தார். யோசித்ததோடு நின்று விடவில்லை. தன்னுடைய இறுதியாண்டு ப்ராஜக்ட் என்னும் திட்ட செயல்முறை தயாரிப்பாக, வண்டி ஒன்றை தயாரித்தார். இப்போது பொறியியல் படிப்பை நிறைவு செய்துள்ள அவர், "நான் தயாரித்துள்ள இந்த மூன்று சக்கர வாகனம், சூரிய ஒளியால் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை கொண்டு மட்டுமே இயங்கும். வேறெந்த எரிபொருளையும் பயன்படுத்தி இதை இயக்க இயலாது.

சூரிய ஒளி, தகடுகள் போன்ற இரண்டு அமைப்புகளால் பெறப்பட்டு ஆற்றலாக மாற்றம் பெற்று லித்தியம் மின்கலம் ஒன்றுக்கு செல்கிறது. வாகனம் இயங்குவதற்கு பயன்பட்டது போக எஞ்சிய ஆற்றல் மின்கலத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. மின்னாற்றல், நேரடியாக மோட்டாருக்குச் சென்று வாகனத்தை இயங்க செய்கிறது," என்று விளக்கியுள்ளார்.

இரும்பு போன்ற கனரக உலோகங்களை பயன்படுத்தாமல் அலுமினியம் உலோக கலவையை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளதால் எடை மிகவும் குறைவு. 5 அடி நீளமும் 3 அகலமும் கொண்ட இந்த வாகனத்தின் தடிமன் ஒரே ஒரு அங்குலமாகும்.
வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டுச் சென்றால் அது மின்னாற்றலை சேமித்துக் கொள்ளும். நான்கு மணி நேரம் சார்ஜ் ஆனால் போதும். ஒருவர் மட்டுமே சென்றால், மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். இருவர் எனில் வாகனத்தின் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டராக இருக்கும். 45 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் வாகனத்தை இயக்கினால், 15 நாள்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதுமானது.

ஜிபிஆர்எஸ் (GPRS) வசதியும் இதில் உண்டு. மட்டுமல்ல, வாகனத்தை தொலைவிலிருந்தே கட்டுப்படுத்த முடியும். அதாவது 20 மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் வாகனத்தை உங்கள் அனுமதியில்லாமல் யாரேனும் இயக்கினால், தொலைவிலிருந்தே இயக்கத்தை நிறுத்திவிடக்கூடிய வசதி உண்டு.

அநேக முறை வடிவமைப்பை திருத்தி, பல்வேறு மாற்றங்களை செய்து இந்த வாகனத்தை தயாரிக்க ஒன்றரை லட்சம் ரூபாய் செலவானதாக பைரே கௌடா தெரிவித்துள்ளார். பெரிய அளவில் தயாரிக்க ஆரம்பித்தால் 80,000 ரூபாய் அடக்கவிலையில் தயாரித்து விடலாம் என்கிறார் இந்த இளம் எஞ்ஜினியர்.

You'r reading பெட்ரோல் இல்லை... புகையும் இல்லை... வண்டி ரெடி! Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை