முதல்ல அமமுக.. அடுத்தது திமுக... அப்புறமா அதிமுக.. மீண்டும் திமுக.. நீ என்ன அரசியல் செய்யற? அன்புமணி மீது பாய்ந்த டாக்டர் ராமதாஸ்!

கூட்டணி விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் மோதல் வெடித்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும்,
' இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை ' என்பது டாக்டர் ராமதாசின் சமீபகால சத்தியமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், "திராவிட கட்சிகளுடன் கூட்டணி இனி இல்லை . அக்கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறோம்" என 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு உரத்துக் குரலில் பேசினார். இந்த நிலையில், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் பாமக கூட்டணி வைக்கும் என கடந்த மாதம் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் அறிவித்தார் ராமதாஸ்.

இது, பாமக தொண்டர்களுக்கும் வன்னியர் சமூகத்தினருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், ராமதாசின் முடிவை எவராலும் எதிர்க்க முடியவில்லை.

திமுக, அதிமுக, பாஜக கட்சிகள், பாமகவை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என ரகசிய பேச்சுவார்த்தையில் இறங்கியன.
"இந்த விவகாரத்தில் தான் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் முட்டிக்கொண்டது " என்கிறார்கள் பாமகவினர்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய பாமகவின் மாநில நிர்வாகிகள், இனி பாமக தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் அல்லது பாமக தலைமையில் கூட்டணி அமைக்கும் என மக்களுக்கு தந்த உறுதி மொழியில் பிறழாமல் இருந்தார் ராமதாஸ். ஆனால், இதனை அன்புமணி ஏற்கவில்லை.

வலிமையான கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே பேசிக்கொள்ளாத நிலையையும் உருவாக்கியது.

குடும்பத்தினர் தலையிட்டதன் பேரில், தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு அன்புமணிக்காக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார். அப்பாவுடன் முரண்பட்டுக்கொண்டே , திமுக தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார் அன்புமணி.

கூட்டணிக்கு ராமதாஸ் ஒப்புக்கொண்டுவிட்டார் எனறதும், அதனை திமுக தலைவர்களுக்குத் தகவல் தந்தார் அன்புமணி. பாமக இருந்தால் வடதமிழகத்தில் திமுக எளிதாக ஜெயிக்கும் என கருத்தில் கொண்டும், தங்களின் வெற்றிக்கும் அதுதான் உதவும் என்றும் கணக்கிட்டு, ' திமுக கூட்டணிக்குள் பாமகவை சேர்ப்பது நமக்கு பலம் 'என்பதாக மு.க.ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அந்த தலைவர்கள்.

ஆனால், பாமகவை சேர்க்கக்கூடாது என திமுகவிலுள்ள ஸ்டாலினின் கிச்சன் கேபினெட்டுக்கு நெருக்கமான சில முன்னாள் அமைச்சர்கள் வைத்த தலையனை மந்திரத்தில், பாமக தேவையில்லை என உதறினார் ஸ்டாலின். இதனால் அப் செட்டான திமுக தலைவர்கள், இதனை அன்புமணியிடம் தெரிவிக்க அவரும் அப் செட்டானார்.

இதனையறிந்த ராமதாஸ், திமுகவுடன் கூட்டணி பேச்சை ஏன் துவங்கினாய் ? என கேட்டு அன்புமணியிடம் கோபப்பட்டார். இந்த விசயத்தில் இரண்டாவது முறையாக இருவருக்கும் மோதல் வெடித்தது. குடும்பத்தினர் தலையிட்டு மீண்டும் சமாதனப்படுத்தினர்.

இந்த நிலையில்தான், பாமகவை தங்கள் கூட்டணிக்குள் வரவேண்டும் என முடிவுசெய்து, ராமதாசுக்கு தூதுவிட்டார் முதல்வர் எடப்பாடி. இதனை பல்வேறு கோணங்களில் எடைபோட்ட ராமதாஸ், வன்னியர் பொதுசொத்து நல வாரிய சட்டத்திற்கு ஜனாதிபதி அங்கீகாரம் கொடுத்துள்ள கோப்புகளின் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதனை கிடப்பில் போட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

அதனை எடப்பாடி ஏற்றுக்கொண்டதால் அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தார் ராமதாஸ். திமுக கைவிட்டதால் அப் செட்டில் இருந்த அன்புமணி, ராமதாஸ் -எடப்பாடி டீல் பிடித்துப் போனதால் அதிமுக கூட்டணிக்கு அன்புமணியும் ஒப்புக்கொண்டார். பேச்சுவார்த்தைகள் சீரியசாக நடந்தன. 90 சதவீதம் சுமூகமாகமானது கூட்டணி உறவு.

இந்த கூட்டணி விவகாரத்தை மு.க.ஸ்டாலினிடம் ஓதிய சில அதிகாரிகள், ' அதிமுக, பாமக கூட்டணி வைப்பது திமுகவுக்கு ஆபத்து. அதுவும் அந்த கூட்டணிக்குள் தேமுதிக, பாஜக கட்சிகளும் சேர்ந்தால் இன்னும் ஆபத்து. பாமகவை திமுகவுக்குள் இழுத்துப் போடுங்கள் ' என அட்வைஸ் செய்திருக்கிறார்கள். பாமகவை நாம் உதறினால் நிச்சயம் ராமதாஸ் தனித்துத்தான் போட்டியிடுவார். அது நமக்கு சாதகம் என நினைத்துதான் பாமகவை உதறினார் ஸ்டாலின்.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயாராவார் என எதிர்பார்க்கவில்லை. இந்தச் சூழலில், அதிகாரிகள் சொன்ன அட்வைஸ் ஸ்டாலினை யோசிக்க வைத்தது. உடனே, 'அன்புமணியிடம் பேசுங்கள்' என பாமக ஆதரவு திமுக தலைவர்களைக் கேட்டுக்கொண்டார் ஸ்டாலின். இதனையடுத்து, அவர்களும் அன்புமணியை தொடர்புகொண்டுபேச, குஷியாகிப் போனார் அன்பு.

அதே வேகத்தில் ராமதாசை சந்தித்து, " அதிமுக வேண்டாம் ; திமுக நம் வழிக்கு வருகிறது. திமுக கூட்டணி தான் நமக்கு பெஸ்ட் ! ஆட்சியாளர்கள் மக்களிடம் கெட்டப் பெயர் எடுத்திருப்பதால் அதிமுக கூட்டணி நமக்கு சரிபட்டு வராது " என சொல்ல, அன்புமணியின் அந்த பேச்சு ராமதாசை ஏகத்துக்கும் கோபப்படுத்தியது. கோபத்தின் வெளிப்பாடாக, " என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே ? இதுதான் நீ அரசியல் செய்ற லட்சனமா ? திமுக வேண்டாம். அவர்கள் கூட்டணி தர்மத்தை மதிக்க மாட்டார்கள். கூட்டணியில் நம்மை வைத்துக்கொண்டே நம்மை தோற்கடிப்பார்கள். திமுக வேண்டாம் " என ஏகத்துக்கும் அன்புமணியை கடிந்துகொண்டார் ராமதாஸ்.

அதனை மறுத்து பேசினார் அன்புமணி. இதனால், இருவருக்கும் மீண்டும் லடாய் உச்சத்தில் இருக்கிறது. அதனால்தான், ' கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு என்னிடம் தந்திருக்கிறது. கூட்டணி முடிவானதும் நானே சொல்கிறேன் ' என சமீபத்தில் பத்திரிகைகளுக்கு அட்வைஸ் செய்வது போல காட்டமாக அறிக்கைத் தந்தார் ராமதாஸ். அது பத்திரிகைகளுக்கு சொன்னதல்ல ; அன்புமணிக்காகச் சொன்னது " என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள். கூட்டணி விவகாரத்தில் ஜெயிக்கப் போவது யார் ? ராமதாஸா ? அன்புமணியா? என்கிற விவாதம் பாமகவில் களைகட்டியிருக்கிறது.

-எழில் பிரதீபன்

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!