'ஹைபர்டென்ஷன்' என்னும் உயர் இரத்த அழுத்தம், 'டயாபட்டீஸ்' என்னும் நீரிழிவு இரண்டும் இன்று பரவலாக காணப்படும் உடல்நல குறைபாடுகளாகும். வாழ்வியல் முறை சார்ந்த ஆரோக்கிய குறைபாடுகளான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா? மேலோட்டமாக பார்த்தால் இந்த இரண்டு குறைபாடுகளுக்கும் தொடர்பு இல்லாததுபோல் தோன்றும். ஆனால், இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயர் இரத்த அழுத்தம்
இரத்தநாளங்களின் சுவர்கள் மேல் இரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் வழக்கத்திற்கு அதிகமானதாக இருந்தால் அக்குறைபாடு உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது. இயல்பு நிலையான 140/90 என்ற அளவுக்கு மேல் இரத்த அழுத்தம் நீண்ட காலமாக இருந்தால் அது உயர் இரத்த அழுத்தம் என்று வகைப்படுத்தப்படுகிறது.
நீரிழிவு
இரத்தத்தில் இயல்பு அளவுக்கு அதிகமாக குளூக்கோஸ் என்னும் சர்க்கரை இருந்தால் அது சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்று கூறப்படுகிறது. கணையம் குறைந்த அளவு இன்சுலினை சுரப்பது மற்றும் இன்சுலினுக்கு உடலின் எதிர்வினை குறைவாக இருத்தல் ஆகிய காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு உண்டாகிறது.
என்ன தொடர்பு?
இன்சுலின் குறைவாக சுரப்பது என்பது நீரிழிவின் இரண்டாம் வகையாகும். இந்த இரண்டாம் வகையும் உயர் இரத்த அழுத்தமும் தொடர்புடையவை. மாரடைப்பு மற்றும் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு ஆகியவை ஏற்படுவதற்கு இந்த இரண்டும் காரணமாகின்றன.
சிறுநீரக நோய், பார்வையிழப்புக்கு வழிவகுக்கும் கண் இரத்த நாள நோயான ரெட்டினோபதி ஆகியவை ஏற்பட உயர் இரத்த அழுத்தமும் நீரிழிவும் வழிவகுக்கின்றன. இயல்பு அளவான இரத்த அழுத்தம் கொண்ட நீரிழிவு பாதிப்புள்ளவர்களை காட்டிலும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்புற்றுள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமன், இன்சுலினுக்கான எதிர் வினையை தடைசெய்தல், ஆக்சிஜனேற்ற தடுப்பான் குறைபாட்டால் உருவாகும் அழுத்தம், திசுக்களின் உருவாகும் அழற்சி போன்றவை தாக்கும் வாய்ப்பு 2.5 மடங்கு அதிகமாகும் என்று அமெரிக்காவின் நீரிழிவு அமைப்பின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்களில் 42 விழுக்காட்டினருக்கு மட்டுமே இரத்த அழுத்தம் இயல்பு நிலையில் உள்ளது. உயர் இரத்த அழுத்த பாதிப்புள்ளவர்களில் 56 விழுக்காட்டினருக்கு மட்டுமே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பு நிலையில் உள்ளது என்று ஹாங்காக்கில் நடந்த இதயநோய் குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.
வாழ்வியல் மாற்றங்கள்
தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் கைகளை வீசி நடப்பது மற்றும் எளிய உடற்பயிற்சிகள் செய்வது இரத்த அழுத்தத்தையும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும். கூடுதலாக இதய தசையை பலப்படுத்தி, இதய இரத்த நாளங்களின் விறைப்புதன்மையை குறைக்கும்.
சாப்பாட்டில் சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவை குறைத்தல், அதிக கொழுப்பு உள்ள இறைச்சிகளை தவிர்த்தல் ஆகியவையும், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள முட்டை, மீன், உடைக்கப்படாத தானியங்கள் மற்றும் பழுப்பு அரிசி ஆகியவற்றை உண்பது போன்ற மாற்றங்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க உதவும். வாழ்வியல் மாற்றங்கள் கைகொடுக்காவிட்டால் மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிடுவது அவசியம்.