மறைமுகமாக விளம்பர நிரல்களை கொண்டிருக்கும் 85 செயலிகளை தனது பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியுள்ளது. 'டிரண்ட் மைக்ரோ' என்ற இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பழைய வடிவை பயன்படுத்தி வருபவர்களுக்கு இந்தச் செயலிகள் இடையூறு விளைவித்து வந்தன என்றும் மூடுவதற்கு கடினமான விளம்பரங்களை ஸ்மார்ட்போன்களின் காட்சிப்படுத்தின என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக செயலிகள் பயனர் நடக்கை மற்றும் நேர அடிப்படை சார்ந்த காரணிகளை கொண்டு கண்காணிக்கப்படும். ஆனால் நீக்கப்பட்ட செயலிகள் தங்களது முறையற்ற நடவடிக்கையை கண்டுபிடிக்க இயலாதவண்ணம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நீக்கப்பட்டவற்றுள் பெரும்பாலான செயலிகள் புகைப்பட செயலிகள் மற்றும் விளையாட்டுகள் (கேம்) போன்று போலியான வடிவமைப்பு கொண்டவை என்றும் AndroidOS_Hidenad.HRXH என்ற கோப்பினை கொண்டு செயல்பட்டு வந்தவை என்றும் 'டிரண்ட் மைக்ரோ' கண்டுபிடித்துள்ளது.
சூப்பர் செல்ஃபி (Super Selfie), காஸ் காமிரா (Cos Camera), பாப் காமிரா (Pop Camera) மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில் (One Stroke Line Puzzle) உள்ளிட்ட இந்த 85 செயலிகளும் வெவ்வேறு டிஜிட்டல் சான்றிதழ்களைக் கொண்டு வெவ்வேறு நிறுவன கணக்குகளிலிருந்து பிளே ஸ்டோரில் பதிவேற்றப்பட்டிருந்தாலும் ஒரே நிரலை பகிரக்கூடிய நடவடிக்கை கொண்டவை என்றும் கூறப்படுகிறது.