கொரோனா காரணமான ஊரடங்கு மக்களுக்குள் உள்ள பல புதிய திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலையில் அநேகர் நேரத்தை கழிப்பதற்காக பல பயனுள்ள வழிகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் ஒன்று போட்காஸ்ட் (podcast). உண்மையில் ஆர்வமுள்ளவர்களுக்கு போட்காஸ்ட் ஆரம்பிப்பதற்கு இது ஏற்ற நேரம். சொந்தமாக போட்காஸ்ட் சேனல் ஆரம்பிக்க விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை காணலாம்.
தரமான மைக்ரோபோன்
போட்காஸ்ட் ஆரம்பிப்பதற்கு முதலில் தேவையானது மைக்ரோபோன். மைக்ரோபோன் தரமானதாக இருந்தால்தான் போட்காஸ்ட் தொழில்முறை நேர்த்தி கொண்டதாக அமையும். போட்காஸ்ட் செய்வதற்கு Conderser வகை மைக்ரோபோன்கள் அவசியம். Maono, AKG, TECHTEST நிறுவனங்களின் மைக்ரோபோன்களை இ-காமர்ஸ் தளங்கள் மூலம் அல்லது நேரடியாக கடைகளில் வாங்கலாம்.
ஸ்டுடியோ ஹெட்போன்
பலவகை ஹெட்போன்கள் சந்தையில் கிடைத்தாலும் போட்காஸ்ட் பதிவு செய்வதற்கு ஸ்டுடியோ ஹெட்போன்கள் அவசியம். அப்போதுதான் போட்காஸ்ட், தெளிவாக சிறப்பாக அமையும். Sennheiser, Audio-Technica, Beyerdynamic நிறுவனங்களின் ஸ்டுடியோ ஹெட்போன்கள் போட்காஸ்ட்டுக்கு ஏற்றவை.
குரல் பதிவுக்கான செயலிகள்
பதிவு செய்ய பயன்படும் பல செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ளன. குரல் தெளிவாக, எதிரொலி போன்ற குறைபாடுகள் இல்லாமல் பதிவாகிறதற்கு Zencastr, Evernote, RecForge Pro, Hi-Q MP3 Voice Recorder போன்ற செயலிகளை பயன்படுத்தலாம்.
தொகுப்பான்
போட்காஸ்ட் வெளியிடுவதற்கு முன்பு அதை ஒலிதொகுப்பு (edit) செய்ய வேண்டும். எல்லா தொகுப்பான்களும் போட்காஸ்ட்டுக்கு ஏற்றவை அல்ல. முதன்முதலாக ஆரம்பிப்பவர்கள் கட்டணமில்லாத தொகுப்பான்களையே தேடுவர். Audacity அவ்வகை தொகுப்பானாகும். GarageBand, Power Sound Editor, Studio One, WavePad போன்ற தொகுப்பான்களையும் பயன்படுத்தலாம். தொழில்முறை பயன்பாட்டுக்கு Adobe audition தொகுப்பான் ஏற்றது.
மடிக்கணினி அல்லது கணினி
உங்கள் போட்காஸ்ட்டை பதிவு செய்து, தொகுத்து வெளியிடுவதற்கு நல்ல மடிக்கணினி அல்லது கணினி அவசியம். போட்காஸ்ட்டை பதிவு செய்வதற்கு முன்பே உங்களிடமுள்ள மடிக்கணினியில் அதை தொகுத்து, ஒலிக்கலவை (audio mix) செய்ய முடியும் என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். வேகமாக இயங்க கூடிய மடிக்கணினி இருந்தால் போட்காஸ்ட்டும் தரமாக அமையும்.
சொந்தமாக போட்காஸ்ட் சேனல் ஆரம்பிப்பதற்கு முன்பு இவற்றை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்