ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்துவோரை இணைய மோசடியாளர்கள் ஒரே வைஃபை தொடர்பிலிருந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஃபயர்ஃபாக்ஸின் எஸ்எஸ்டிபி எனப்படும் சிம்பிள் சர்வீஸ் டிஸ்கவரி புரோட்டோகாலில் இருந்த குறைபாட்டை ஆஸ்திரேலிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கிறிஸ் மொபர்லி கண்டறிந்தார்.
மோசடியாளர் பயன்படுத்தும் நெட்வொர்க்கை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட இன்னொரு பயனர் உபயோகித்தால் அவரது ஃபயர்ஃபாக்ஸ் பிரௌசரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆபத்தான இணையதளத்திற்கு கொண்டு செல்வது அல்லது ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஃபயர்ஃபாக்ஸ் எக்ஸ்டென்ஷனை நிறுவச் செய்வது போன்ற செயல்களில் மோசடியாளர்கள் ஈடுபடமுடியும்.
ஃபயர்ஃபாக்ஸில் உள்ள இக்குறைபாட்டை தற்போது மொஸில்லா நிறுவனம் நிவிர்த்தி செய்துள்ளது. இடிபி எனப்படும் என்கேண்ஸ்ட் டிராக்கிங் புரொடக்சன் என்னும் வசதியை ஆண்ட்ராய்டுக்கான புதிய ஃபயர்ஃபாக்ஸ் செயலி கொண்டுள்ளது. ஆகவே, பயனர்கள் ஃபயர்ஃபாக்ஸ் வி79 வடிவத்தை பயன்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று மொஸில்லா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொது வைஃபை தொடர்புகளை பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல என்பதை இச்செய்தி இன்னொரு முறை உறுதிப்படுத்தியுள்ளது.