ஆயுர்வேத மருத்துவம் நம் வீட்டில் உள்ள பல பொருள்களிலுள்ள மருத்துவ குணங்களை விளக்கிக் கூறுகிறது. எளிய விதத்தில் அவற்றை நாம் உட்கொள்வதன் மூலம் பல்வேறு உடல் நல சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
உடலில் சூடு குறைவான அதாவது 'கபம்' வகை உடல் கொண்டவர்கள் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக கொண்டிருப்பர். சளி, இருமல் மற்றும் ஃப்ளூ ஆகிய உடல் நல கோளாறுகள் இவர்களுக்கு வந்து கொண்டே இருக்கும். அது போன்றவர்கள் வெந்தயத்தை சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். ஆம், வெந்தயத்தில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தய தோசை, வெந்தய கஞ்சி, வெந்தய களி, வெந்தய குழம்பு, வெந்தய காஃபி, வெந்தய சோறு என்று பலவிதங்களில் வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
பாலூட்டும் தாய்மார்
வெந்தயத்தை ஊற வைத்த நீரை பருகுவது தாய்ப்பால் சுரப்பை தூண்டும். சிறிய அளவு வெந்தயமும் அதிக நன்மையை அளிக்கும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வெந்தயம் நல்லது. பேறுகாலத்திற்குப் பிறகு கர்ப்பப்பை பழைய நிலைக்கு திரும்புவதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் எடுப்பர். வெந்தயம் ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் கர்ப்பப்பை பிரசவத்திற்கு பின் பழைய நிலையை எட்டும். மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி, வயிற்று உப்பிசம் போன்றவற்றுக்கு சிறிதளவு வெந்தயத்தை மோர் அல்லது தண்ணீருடன் கலந்து எடுத்துக்கொள்ள வலி குறையும்.
இரத்த சர்க்கரை
இன்சுலினை உடல் ஏற்றுக்கொள்ளாத நிலையால் நீரிழிவு பாதிப்பு கொண்டிருப்போருக்கு வெந்தயம் அதிக உதவியாக அமையும். உடலில் சுரக்கும் இன்சுலினை பயன்படுத்தச் செய்யும் இயல்பு வெந்தயத்திற்கு உண்டு. ஆகவே, சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டோர் வெந்தயத்தை பயன்படுத்துகின்றனர்.
உடல் எடை
காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரை பருகினால் உடலின் வளர்சிதை மாற்றம் தூண்டப்படும். வெந்தய நீரை பருகுவதால் உடலில் வெப்பம் ஏற்படுகிறது. இந்த வெப்பம் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு வெந்தயம் ஊற வைத்த நீர் பயனளிக்கும்.
வாயு தொல்லை
வெந்தயத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலம் பலம் பெறும். வாயு தொல்லை மற்றும் வயிறு உப்பிசம் ஆகியவை மறையும். குளிர்காலத்தில் வெந்தயத்தை எடுத்துக்கொள்வது அதிக பயன் தரும்.
கூந்தல் பராமரிப்பு
சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து தலைமுடியில் தேய்த்து கால் மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளித்தால், உடல் சூடு தணியும். கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வாறு செய்யலாம். வெந்தயத்தில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது. ஆகவே அதை தொடர்ந்து உட்கொண்டால் உடலுக்கு இளைப்பாறிய உணர்வு கிடைக்கும்.
வெந்தயம் சூடு தன்மை கொண்டது. ஆகவே ஒரே ஒரு தேக்கரண்டி அளவு மட்டும் எடுத்து ஒரு கப் நீரில் ஊற வைத்து பயன்படுத்தவேண்டும். சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை எட்டு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பருத்தி துணியில் கட்டி வைத்தால் சில மணி நேரத்தில் முளை கட்டும். அதை பயன்படுத்தலாம் அல்லது வெந்தயத்தை பொடி செய்து வைத்து தினமும் மோரில் சிறிது உப்புடன் கலந்து குடிக்கலாம். தீவிர வயிற்றுப்புண் கொண்டோர் வெந்தய நீரை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.