கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?

by SAM ASIR, Apr 28, 2021, 12:20 PM IST

ஒழுங்காக உடற்பயிற்சி செய்து வந்தவர்களுக்கும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று வந்தவர்களுக்கும் கொரோனா பெரிய தடையாக அமைந்துவிட்டது. உடற்பயிற்சிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் உடலுக்குத் தேவையான பயிற்சிகளை செய்வது கடினமாகியுள்ளது. குறிப்பாக, உடல் எடையை கட்டுப்படுத்தும் நோக்கில் பயிற்சி செய்தவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சி செய்ய இயலாவிட்டாலும் நாம் சாப்பிடும் உணவுகளை கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்யலாம்.

நாம் சமையலில் பயன்படுத்தும் மசாலா பொருள்களும் மூலிகைகளும் வெறுமனே சுவையையும் மணத்தையும் அளிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அவை நம் ஆரோக்கியத்தை காப்பதற்கும் உதவுகின்றன. உடல் ஆரோக்கியத்தில் எடையை குறைப்பதற்கும் முக்கிய இடம் உள்ளது. உடல் எடை தேவைக்கு அதிகமானதாக இல்லாமல் இருப்பதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழியாகும். பல்வேறு மூலிகைகள், மசாலா பொருள்கள் நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி (மெட்டபாலிசம்) உடலில் கொழுப்பினை கரைப்பதற்கு உதவுகின்றன. சில மூலிகைகள் கொடும்பசியை தடுப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவுகின்றன.

இலவங்க பட்டை

இலவங்க மரத்தின் தண்டிலிருந்து எடுக்கப்படும் பட்டை நறுமணம் கொண்டது. இதில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன. இலவங்க பட்டைக்கு பசியை எடுப்பதை தணிக்கும் இயல்பு உண்டு. இதன் காரணமாக தேவையற்ற நொறுக்குத்தீனிகள், தின்பண்டபங்களை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. அதிக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பையும் இது தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை இது கட்டுப்படுத்துவதால் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. இலவங்க பட்டை பொடியை உணவில் கலப்பதால், உடலிலுள்ள கொழுப்பை கரைக்க முடியும்.

வெந்தயம்

வெந்தயமும் ஒரு வித மணம் கொண்டது. இதில் 45 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. வெந்தயத்திலுள்ள பெரும்பாலான நார்ச்சத்து கரையாத தன்மை கொண்டது. ஆகவே, கார்போஹைடிரேடு மற்றும் கொழுப்பு ஜீரணமாவதை இது தாமதிக்கிறது. தாமதமான ஜீரணத்தால் அதிக நேரம் வயிற்றில் திருப்தியான உணர்வு காணப்படும். இதன் காரணமாக தேவையற்ற நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். வெதுவெதுப்பான நீரை ஒரு தம்ளரில் ஊற்றி, அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிடுவது பயனளிக்கும்.

மஞ்சள்

மஞ்சளுக்கு அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மை உண்டு. இது உடல் எடையை குறைப்பதற்கு உதவும். மஞ்சளில் கர்குமின் என்னும் பொருள் உள்ளது. இது மருத்துவ குணம் கொண்டது. உடல் எடையை குறைப்பதில் கொழுப்பை கரைப்பது மிக முக்கிய வழியாகும். கர்குமின் உடலிலுள்ள கொழுப்பை கரைக்கிறது. மஞ்சளை உணவில் சேர்த்துகொள்வதால் இடுப்பின் சுற்றளவு குறைவதாகவும் பயன்பெற்றோர் கூறுகின்றனர்.

கறுப்பு மிளகு

மிளகில் உள்ள பைப்பரின் (piperine)என்ற பொருள் மருத்துவ குணம் கொண்டது. உடலில் கொழுப்பு தேங்குவதை தடுக்கும் இயல்பு மிளகுக்கு உள்ளது. உடலிலுள்ள தேவைக்கு அதிகமான கொழுப்பினை இது விரைவாக கரைக்கிறது. வயிற்றில் திருப்தியான உணர்வை தருகிறது. மிளகினை அப்படியே மெல்லலாம் அல்லது மிளகு டீ தயாரித்து அருந்தலாம்.

You'r reading கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை