நண்பர்கள் ஒன்றாய் டீ குடிக்கலாம்; அரட்டை அடிக்கலாம்; பயணிக்கலாம்; அலைபேசியில் கூட்டு அழைப்பில் (Conference call) பேசலாம். ஆனால், வீடியோ பார்க்க முடியுமா? ஃபேஸ்புக் அந்த வசதியை அளிக்க இருக்கிறது.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வராத நிலையில் அனனாய் அரோரா என்பவர் இதற்கான கணினி நிரலை (coding) டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
'இப்போது இணைந்து காண்பதற்கு' (tap to watch together now) 'ஒரு வீடியோ குறித்து ஒரே நேரத்தில் பேசிக்கொள்வதற்கு' (chat about the same videos at the same time) என்று அந்த நிரல்களுக்கு குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி ஃபேஸ்புக்கின் அடிப்படை தளத்தில் செய்யப்படாமல் மெசன்ஜரில் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
வீடியோ குறித்து ஒரே குழுவில் உள்ளவர்கள் பேசிக்கொள்ளக்கூடிய வசதி 'வாட்ச் பார்ட்டி' என்ற பெயரில் ஏற்கனவே உள்ளது. வாட்ச் பார்ட்டி ஆரம்பித்தவுடன் ஒரே வீடியோவை ஒரே சமயத்தில் பார்ப்பதற்கு, நேரலையில் இணைவதற்கு, பதிவு செய்வதற்கு, ஒரு காரியத்தை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியும்.
புதிய வசதி வரும்போது குறிப்பிட்ட குழுவில் இல்லாத நண்பர்களோடும் இணைந்து கொள்ளலாம். தொடர்ந்து இந்த வசதி முகநூல் பக்கத்திற்கும் (pages) விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு ஒளிக்கோப்புகளை (short-format video) பகிர்ந்து கொள்ளக்கூடிய 'லாசோ' (Lasso) என்னும் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.