கூகுள் கிளவுட் (Google Cloud) நிறுவனத்திற்கு வரும் 2019ம் ஆண்டு முதல் புதிய தலைவர் நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைவரான டயான் கிரீன், வலைத்தளப் பதிவில் இதை தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த டயான் கிரீன், அதன் கிளவுட் பிரிவு வணிகத்தை கவனித்து வந்தார். நவம்பர் 26ம் தேதி முதல் தாமஸ் குரியன், கூகுள் கிளவுட் நிறுவனத்தில் இணைய இருக்கிறார். 22 ஆண்டுகள் ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றிய தாமஸ் குரியன், ஆரக்கிள் நிறுவனத்தில் தயாரிப்பு பிரிவு தலைவராக இருந்து வந்தார். வரும் புத்தாண்டின் தொடக்கம் முதல் இவர் கூகுள் கிளவுட் நிறுவனத்தை தலைமையேற்று நடத்த இருக்கிறார்.
"கடந்த மூன்று ஆண்களாக நம்ப இயலாத அளவு வளர்ச்சியை கண்ட பின்னர், என்னுடைய நெடுநாள் வாஞ்சையான கல்வியை நோக்கி மனம் செல்கிறது. ஆரக்கிள் (Oracle) நிறுவனத்தில் நீண்ட அனுபவம் பெற்ற தாமஸ் குரியன், கூகுள் கிளவுட் நிறுவனத்தை அடுத்த உயர்ந்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார் என்று நம்புகிறேன்," என்று டயான் கிரீன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டயான் கிரீன், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டில் இயக்குநராக தொடர்வார் என்று கூறப்படுகிறது. ஒரு காலாண்டில் மட்டும் 1 பில்லியன் டாலருக்கு மேலாக கிளவுட் நிறுவனம் வர்த்தகம் செய்திருந்ததாக இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.