இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் நவம்பர் மாத பட்டியலின்படி, 4ஜி அலைக்கற்றை தரவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சராசரியாக ஜியோவின் டவுண்லோடு என்னும் தரவிறக்க வேகம் 20.3 Mbps ஆக பதிவாகியுள்ளது.
இந்திய தொலைதொடர்பு சேவைக்குள் 2016ம் ஆண்டு ஜியோ கால்பதித்தது. பயனர்களுக்கு அதிவேக டேட்டா அனுபவத்தை தருவதாக அந்நிறுவனம் வாக்குக்கொடுத்தது. தொடர்ந்து 4ஜி சேவையில் முதலிடத்தில் இருந்து வரும் ஜியோவின் தரவிறக்க வேகம், அக்டோபர் மாதத்தை விட நவம்பரில் குறைந்தாலும் அதிகபட்சமாக 22.3 Mbps வேகத்தில் சேவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மின்னஞ்சல் அனுப்புவதற்கு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக செயலிகளுக்கு, செய்திகள் வாசிப்பதற்கு மொபைல் போனை பயன்படுத்துவோருக்கு 10 Mbps என்ற வேகத்தில் தரவிறக்க சேவை இருந்தால் போதுமானது. கேம் என்ற விளையாட்டு செயல்பாடுகளுக்கு 3 Mbps தரவிறக்க வேகமும் 2 Mbps தரவேற்ற வேகமும் போதுமானது. இந்த வேகம் அதிகரிக்க அதிகரிக்க கேம் விளையாடுவது இனிய அனுபவமாகவே அமையும்.
ஜியோவின் 20.3 Mbps என்ற வேகம் சமூக ஊடக செயலிகள் இயங்குவதற்கு, நெட்பிளிக்ஸ், பிரைம் மற்றும் யூடியூப் போன்றவற்றில் வீடியோ பார்ப்பதற்கு தேவைக்கு மேலானது.
அக்டோபர் மாதம் 9.5 Mbps வேகத்தில் 4 ஜி தரவிறக்க சேவை அளித்த ஏர்டெல் நவம்பரில் 9.7 Mbps வேகத்திலும், அக்டோபரில் 6.6 Mbps வேகத்தில் சேவையளித்த வோடஃபோன் ஐடியா நவம்பரில் 6.8 Mbps வேகத்திலும் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.