15 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசக்கூடிய வண்ணம் 21 நாள் வரை சார்ஜ் தீராத பேட்டரியுடன் நோக்கியா 106 சந்தைக்கு வந்துள்ளது.
ஃபீச்சர் (Feature)போன் ரகத்தை சேர்ந்த நோக்கியா 106ல் ஸ்நேக் சென்ஸியா கேம் உள்ளது. எல்இடி டார்ச், எஃப்எம் ரேடியோ வசதிகளை கொண்ட இதில் 500 குறுஞ்செய்திகளையும் 2,000 தொடர்பு எண்களையும் பதிவு செய்து வைக்கலாம். மைக்ரோ யூஎஸ்பியை பயன்படுத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம்.
"இந்திய மக்கள் நெடுநேரம் மின்னாற்றல் நிலைத்திருக்கக்கூடிய போன்களையே விரும்புகின்றனர். எளிய இடைமுகத்தோடு (interface) நீண்டகாலம் உழைக்கக்கூடிய போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. ஃபீச்சர் போன் சந்தையில் இந்தியா முக்கியம் வாய்ந்த நாடாகும்," என்று ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் அஜய் மேத்தா தெரிவித்துள்ளார்.
அடர்சாம்பல் வண்ணத்தில் வந்துள்ள நோக்கியா 106 போன் ரூ.1,299க்கு இந்தியா முழுவதும் உள்ள மொபைல்போன் சில்லறை விற்பனையாளர்களிடமும் Nokia.com/phones இணைய தளத்திலும் கிடைக்கிறது.