மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், சரத்பவா இன்று பிற்பகல் ஆஜராகிறார். ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் விசாரிக்கப்படும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிர முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் சரத்பவார். மூத்த அரசியல் தலைவரான இவர் காங்கிரசில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறார். மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.25 ஆயிரம் கோடி கடன் மோசடிகள் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் சரத்பவார் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகுமாறு சரத்பவாருக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியிருக்கின்றனர். இதைக் கண்டித்து. தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நேற்று மும்பையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 21ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சரத்பவார் மீது பொய் வழக்கு போட்டு அவரை முடக்க முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கிடையே, சரத்பவாரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய பின்பு அவரை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாகக கூறப்படுகிறது. அப்படி கைது செய்தால் அவரது கட்சியினர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால், தெற்கு மும்பையில் பல பகுதிகளில் போலீசார் 144 தடையுத்தரவு போட்டிருக்கின்றனர்.