பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஷங்கரின் 2.0 திரைப்படம் மூலம் கோலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். நேற்று வெளியிடப்பட்ட அக்ஷய் குமாரின் 'கேசரி' படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.
தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில், போஸ்டரை வெளியிட்டார். மேலும், 'இது, 1897ஆம் ஆண்டு 10 ஆயிரம் ஆப்கானிஸ்தான் வீரர்களை 21 பயமறியா சீக்கிய வீரர்கள் எதிர்த்து போரிட்ட வரலாற்றின் மிகப்பெரிய போர் பற்றிய கதை' என்ற தகவலையும் வெளியிட்டு இருந்தார்.
ஏர்லிஃப்ட், டாய்லெட் ஏக் பிரேம் கதா, ரஸ்டம், பேடுமேன், கோல்டு மற்றும் கேசரி என தொடர்ந்து, இந்திய தேச பற்றை பறைசாற்றும் படங்களிலேயே கவனம் செலுத்தி அக்ஷய் குமார் நடித்து வருவது அவர் ஒரு சிறந்த தேசபக்தன் என்பதையே காட்டுகின்றது.
மசாலா படங்களில் கவனம் செலுத்தாது, தொடர்ந்து அவர் இது போன்ற படங்களில் நடித்து வருவதால் தான், அமீர்கானின் டங்கல் படம் வந்த பொழுதும், ரஸ்டம் படத்திற்காக, அக்ஷய் குமாருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது என்றால் அது மிகையல்ல!
கான்களின் கோட்டையாக உள்ள பாலிவுட்டில், தனக்கென்று ஒரு தனி சிம்மாசனத்தை அக்ஷய் தற்போது பிடித்து விட்டார். மேலும், இதுபோன்ற படங்களில், தனது தனித்துவமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற வாழ்த்துகள்!